அன்னுார்;அன்னுார் வட்டாரத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து, பொதுமக்கள் மற்றும் பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அன்னுார் தெற்கு துவக்கப் பள்ளியில், கலை நிகழ்ச்சியை, கிராம கல்விக் குழு தலைவர் விஜயகுமார், துவக்கி வைத்தார்.வட்டார கல்வி அலுவலர் தர்மராஜ் பேசுகையில், "இல்லம் தேடி கல்வி திட்டத்தால், மாணவர்களின் கற்றல் குறைபாடு நீங்கும். ஆர்வமுள்ள தன்னார்வலர்கள், கற்பிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பள்ளி செல்லாத குழந்தைகள், இடைநின்ற குழந்தைகள் குறித்து, பெற்றோரும் பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம்" என்றார்.நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியை ஜீவலதா, ஆசிரிய பயிற்றுனர்கள் வேல்விழி, செண்பக பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கலைக்குழுவினர் பாடல் பாடியும், இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து இசையுடன் நடனமாடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.