மேட்டுப்பாளையம்:காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில், கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இரண்டு நாட்களில், 334 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகையில், 7 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இங்கு, கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. சிறப்பு முகாம்களிலும், பரிசோதனைகள் நடைபெறுகின்றன.கடந்த 22ம் தேதி, 160 பேர்; 23ம் தேதி, 174 பேர் என, இரு நாட்களில், 334 பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சுகாதார ஆய்வாளர் சண்முகசுந்தரம் கூறியதாவது: மேட்டுப்பாளையம் தாலுகாவில் காரமடை, சீளியூர், வெள்ளியங்காடு, சிறுமுகை, சின்னகள்ளிபட்டி, இரும்பறை ஆகிய, 6 கிராம பகுதிகளிலும், மேட்டுப்பாளையத்தில் நகர் நல அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என, ஏழு இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. கொரோனா நோயின் தாக்கம் குறைக்க, 7 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தினமும் தடுப்பூசி போடும் பணிகள், காலை, 9:00 லிருந்து மாலை, 5:00 மணி வரை நடைபெறுகிறது.இருந்த போதும் நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.பொதுமக்களுக்கு நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பல்வேறு இடங்களிலும் முகாம்கள் அமைத்து, கொரோனா பரிசோதனை செய்யப்படுகின்றன.அப்போது பொது மக்களிடம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.