உடுமலை:பள்ளிகளில் முறையாக போட்டிகள் நடத்தப்படாததால், மாணவர்களின் விளையாட்டு ஆர்வம் வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்களின் விளையாட்டுத்திறமைகளை வெளிப்படுத்த ஆண்டுதோறும் குறுமைய, மாவட்ட, மண்டல, மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.அதன்படி, திருப்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த மாணவர்கள் பலர், இப்போட்டிகளில் வென்றதன் வாயிலாக, 'ஸ்போர்ட்ஸ் கோட்டா'வில் கல்லுாரியில் சேர்ந்தும், அரசின் பல்வேறு சலுகைகளைப்பெற்றும் வருகின்றனர்.இதற்காக, அவரவர் விரும்பும் விளையாட்டிற்கு ஏற்ப, உடற்கல்வி ஆசிரியர் மட்டுமல்லாது, தனி பயிற்சியாளர் வாயிலாகவும் பயிற்சி பெற்று வந்தனர்.ஆனால், கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக, பள்ளிகளில் முறையாக போட்டிகள் நடத்தப்படாததால், மாணவர்களின் விளையாட்டு ஆர்வம் வெகுவாக குறைந்துள்ளது.விளையாட்டு மைதானங்கள், பயன்படுத்தப்படாமல், மாணவர்களின் மனபலம் குறைந்து வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது:நோய்த்தொற்று பரவலை தடுக்க போட்டிகள் நடத்தப்படுவதில்லை. மாணவர்களை தயார்படுத்தி போட்டிகளில் பங்கேற்கச்செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் குறைந்து வருவதுடன் சினிமா, இன்டர்நெட், பேஸ்புக், செல்போன் உள்ளிட்டவை மீதான மோகம் அதிகரித்து காணப்படுகிறது.இதேநிலை நீடித்தால், இனி வரும் நாட்களில், திறன் வாய்ந்த விளையாட்டு வீரர்களை எளிதில் அடையாளம் காண முடியாத நிலை ஏற்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.