பொள்ளாச்சி:பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு பல இடங்களில் சிதைந்து கிடப்பதால், தமிழகம் - கேரளா போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. விபத்து, நெரிசலும் அதிகரித்துள்ளது.பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு, தமிழகம் - கேரளாவுக்கான முக்கிய இணைப்பு ரோடாக உள்ளது. இந்த ரோட்டில், வடுகபாளையம் பிரிவு பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படுவதால், போக்குவரத்து மார்க்கெட் ரோடு - மீன்கரை ரோடு வழித்தடத்தில் மாற்றி விடப்பட்டுள்ளது.இந்த வழித்தடம், ஏற்கனவே மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம் வழியே கேரளாவையும், ஆனைமலை பகுதிகளையும் இணைக்கும் ரோடு என்பதால், அதிக வாகன போக்குவரத்து மிக்க ரோடாக உள்ளது.இந்நிலையில், பாலக்காடு ரோட்டின் போக்குவரத்தும் இந்த வழித்தடத்தில் மாற்றி விடப்பட்டுள்ளதால், வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.இந்நிலையில், மார்க்கெட் ரோடு, திருவள்ளுவர் திடல் அருகே, காந்தி மார்க்கெட் நுழைவாயில் முன், மாட்டுச்சந்தை நுழைவாயில் எதிரே என பல இடங்களில் ரோடு மோசமாக சிதைந்து கிடக்கிறது.இதனால், இரு மாநில போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதுடன், விபத்து மற்றும் நெரிசல் ஏற்படுகிறது.இந்த சேதமான பகுதிகளை சீரமைக்க, அதிகாரிகள் எவ்வித அக்கறையும் காட்டாமல் இருப்பது, வியாபாரிகள், பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வர இருக்கும் சூழலில், அதிகாரிகளின் இந்த அலட்சிய போக்கு, அதற்கான 'வெகுமதியை' பெற்றுத்தரும் என்பதை ஆளுங்கட்சியினர் உணர வேண்டியது அவசியம்.