பந்தலுார்:பந்தலுார் அருகே, வட்டக்கொல்லி பகுதியில், மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது தொடர்பான வழக்கில், குற்றவாளியை பிடிக்க மீண்டும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.பந்தலுார் அருகே, அய்யங்கொல்லி வட்டக்கொல்லி கிராமத்தை சேர்ந்த சஜி என்பவரின் விவசாய தோட்டத்தில் யானைகள் வந்து செல்வதை தடுக்க, மின்வேலி அமைக்கப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டு ஆக., 12ல் வெளியே கிடந்த மின் கம்பியை மிதித்த ஆண் யானை, மின்சாரம் தாக்கி உயிர் இழந்தது.வனத்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், நிலத்தின் உரிமையாளர் சஜி குடும்பத்துடன் தலைமறைவானார். சம்பவம் நடந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில் குற்றவாளியை, வனத்துறையினர் பிடிக்க முடியவில்லை. இதனால், தற்போது மீண்டும் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.இதற்காக, வன அலுவலர் கொம்முஓம்காரம் மேற்பார்வையில், பிதர்காடு வனச்சரகர் ராம்குமார் (பொ) தலைமையில், வனவர்கள் பரமேஸ்வரன், ஜார்ஜ் பிரவீன் சன், வனக்காப்பாளர்கள் ராஜேஷ்குமார், ராமச்சந்திரன், காளன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில், 'குற்றவாளி இருப்பிடம் குறித்து, மக்களுக்கு தகவல் தெரிந்தால், வனத்துறைக்கு தெரிவிக்கவும், தகவல் தருபவரின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும்,' என்றனர்.