புழல், : ஒலி, ஒளி அமைப்பு தொழிலாளர் சங்க துவக்க விழாவில், கொரோனா விதிகளை தளர்த்தி தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது.சென்னை புழலில், நேற்று முன்தினம் மாலை, தமிழ்நாடு ஒலி, ஒளி அமைப்பு தொழிலாளர்களின், மாதவரம், -புழல் கிளை சங்க துவக்க விழா நடந்தது. அதில் மாநில, மாவட்ட, பகுதி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
அப்போது, சென்னை மாவட்ட சங்க தலைவர் கருப்பையா கூறியதாவது:கோவில் திருவிழா, திருமணம், அரசியல் கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஒலி, ஒளி அமைக்கும் தொழிலை நம்பி, மாநிலம் முழுக்க, 10 லட்சம் குடும்பத்தினர் வாழ்கின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாகவே தொழில் முடங்கி, கஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர்.அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில், கொரோனா விதிகளை கடைப்பிடித்து தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும்.மேலும், அமைப்பு சாரா பிரிவில் உள்ள எங்கள் தொழிலாளர்களுக்கு, அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்க அரசு உதவ வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.