ஆலந்துார் : ஆலந்துார் சாலையில், 20 நாட்களுக்கு முன் குடிநீர் குழாய் உடைப்பால் திடீர் பள்ளம் ஏற்பட்டது. அதை இன்றளவில் சரி செய்யாததால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை, ஆலந்தூர், புதுப்பேட்டை தெருவில், பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும், பாதாள சாக்கடை குழாயில், கடந்த, 6ம் தேதி உடைப்பு ஏற்பட்டு, சாலையில் மூன்று அடி அகலத்திற்கு பள்ளம் விழுந்தது.
இதை கண்ட அப்பகுதி மக்கள், மண்டல குடிநீர் வாரியத்திற்கு தகவல் கொடுத்தனர். குடிநீர் வாரிய ஊழியர்கள் விரைந்து, சாலையின் இரு பக்கமும் தடுப்புகள் அமைத்தனர்.ஆனால், இன்றளவில் சீரமைப்பு பணி துவக்கப்படவில்லை. ஆலந்தூர் மார்க்கெட், ரயில் நிலையம் செல்லும் பிரதான சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.சம்பந்தப்பட்ட குடிநீர் வாரியத்தில் பலமுறை புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி, சீரமைப்பு பணிகளை விரைவில் துவக்கி, போக்குவரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.