கடலுார் : கடலுாரில் வனத்துறை உதவியுடன் ஆமை முட்டைகள் சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.ஆமை ஊர்வன இனத்தைச் சேர்ந்த விலங்கு. நீரிலும் நிலத்திலும் வாழும். நிலத்தில் வாழும் ஆமைக்கு கால்களில் நகங்கள் உள்ளன.
கடல் ஆமைகளுக்கு கால்கள் துடுப்பு போன்றிருக்கும். உலகில் 356 வகை ஆமையினம் கண்டறியப்பட்டுள்ளன. நிதானமான இதயத் துடிப்பு இருப்பதால் ஆமைகள் நீண்ட ஆயுளுடன் இருக்கும். கடல் ஆமைகளுக்கு உணவு ஜெல்லி பிஷ், சிறு மீன்கள், கடல் அழுக்கு போன்றவையாகும். இது மீனவர்களின் நண்பன், கடல் துப்புரவாளன் என்று அழைக்கப்படுகிறது. முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இனத்தை சேர்ந்த இவை நீரில் மற்றும் நிலத்தையொட்டி வாழ்ந்தாலும் தரையில் தான் முட்டையிடும்.கடலில் வசிக்கும் பெண் ஆமைகள் கருத்தரித்ததும், கடற்கரையை நோக்கி கூட்டமாக பயணித்து, மண்ணில் பள்ளம் தோண்டி முட்டையிடும். அவற்றை மண் போட்டு மூடிவிட்டு திரும்ப கடலுக்குள் சென்று விடும். குஞ்சுகள் பொரித்து கடலுக்குள் வரும் வரை தாய் ஆமை கடலில் 5 நாட்டிகல் மைல் தொலைவில் காத்திருக்குமாம்.ஆமைக்குஞ்சுகள் வளர்ந்து கரு தரித்ததும் எங்கு பிறந்தனவோ, அதேப் பகுதி கடற்கரைக்கு வந்து தான் முட்டையிடும்.
நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆமைகள் முட்டையிடும். ஆமை முட்டைகள் 45 முதல் 60 நாட்களில் குஞ்சு பொரித்து விடும். கடல் ஆமை ஒரே நேரத்தில் 200 முட்டைகள் வரை இடும். அதிகளவாக கடலுார் அடுத்த ராசாபேட்டை கடற்கரையில் 259 ஆமை முட்டைகள் கடந்த 2017ல் கண்டு பிடிக்கப்பட்டன. ஆரம்ப காலத்தில் நாய், நரி போன்றவை கடற்கரையில் புதைந்திருக்கும் ஆமை முட்டைகளை சாப்பிட்டு விடும். மனிதர்களும் ஆமை முட்டை சாப்பிட்டனர். மீன் பிடி வலைகளிலும் சிக்கி ஆமைகள் இறப்பது வழக்கம்.அதே போல், ஜெல்லி பிஷ் என நினைத்து, கடலில் மனிதர்கள் வீசும் பாலித்தின் கவர்களை சாப்பிடும் ஆமைகள் இறந்து விடுகின்றன. இதனால் ஆமைகள் வெகுவாக அழிந்து வந்தன.இதனால் ஆமைகளை காக்க வன விலங்கு ஆர்வலர்கள் அவற்றின் முட்டைகளை சேகரித்து, பாதுகாப்பான இடத்தில் வைத்து குஞ்சு பொரிக்க வைத்து திரும்ப கடலுக்குள் விட்டுவிடுவர்.50,000 முட்டைகள்கடந்த 2016-17 முதல் கடலுார் மாவட்ட கடற்கரை பகுதிகளில் ஆமை முட்டைகளை சேகரித்து, பாதுகாப்பாக வைத்து குஞ்சு பொரித்ததும் பின், கடலில் விட்டு வருகின்றனர்.
கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 50 ஆயிரம் ஆமை முட்டைகள் வரை சேகரிக்கப்பட்டு, குஞ்சுகள் பொரிக்க வைத்து கடலில் விடப்பட்டுள்ளன. தற்போது கடலுார் கடற்கரையில் ஆமை முட்டைகள் சேகரிக்கும் பணியில் வனத்துறையினர் உதவியுடன் பாம்பு படிக்கும் செல்லா உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக தேவனாம்பட்டினம் கடற்கரையில் பாதுகாப்பு வேலி அமைத்து மண்ணில் புதைத்து பாதுகாத்து வருகின்றனர்.
இது வரை 1000க்கும் மேற்பட்ட முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல், மே மாதங்களில் குஞ்சுகள் பொரித்ததும் மீண்டும் கடலுக்குள் விட்டுவிடுவர். கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் ஆமை முட்டை வைக்கப்பட்டுள்ள இடத்தை பொது மக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்துச் செல்கின்றனர்.