மாமல்லபுரம், : மாமல்லபுரம் நாட்டிய விழாவில், அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழக சிற்றுண்டி விற்பனை தடைபட்டு, பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
புறக்கணிப்புமாமல்லபுரத்தில், தமிழக சுற்றுலாத் துறை ஆண்டுதோறும் டிசம்பர் - ஜனவரி மாதங்களில், இந்திய நாட்டிய விழாவை நடத்துகிறது.மத்திய சுற்றுலா அமைச்சக பங்களிப்புடன், விழா நடத்தப்படுகிறது. தற்போதும், கடந்த டிச., 23ல் துவக்கிய விழா, நேற்றுமுன்தினம் நிறைவு பெற்றது. மழை, ஞாயிறு ஊரடங்கு காரணமாக, ஐந்து நாட்கள் தடைபட்டது.இவ்வூர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதி நிர்வாகம், விழாக்கால விற்பனை கருதி, பல ஆண்டுகளாக சிற்றுண்டி விடுதி நடத்தும்.சிற்றுண்டி, தேனீர், தின்பண்டம் உள்ளிட்டவை விற்பனை செய்து, வருவாய் ஈட்டும். கடந்த 2019ல் 11 லட்சம் ரூபாய், 2020ல் 12 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டியது. தற்போது சிற்றுண்டி விடுதி நடத்தாமல் புறக்கணிக்கப்பட்டது.
விழாவை, சுற்றுலாத் துறை நேரடியாக நடத்துவதே நீண்டகால நடைமுறை. தற்போது இந்நடைமுறையை தவிர்த்து, தனியார் நிகழ்வு நிர்வாக நிறுவனத்திடம் ஒப்படைத்தது. அந்நிறுவனம், அதன் வருவாய் கருதி, விழாவிற்கு தொடர்பின்றி, 108 திவ்விய தேச சுவாமியர் கண்காட்சி, உணவுத் திருவிழா என நடத்தியது. நுழைவுக் கட்டணம்இதற்காக, தலா 50 ரூபாய் நுழைவுக்கட்டணம், 20 ரூபாய் வாகன நிறுத்துமிட கட்டணம் என வசூலித்தது.கட்டண விவகாரத்தால், பயணியரிடம் வரவேற்பின்றி வெறிச்சோடி, பின்னர் கைவிடப்பட்டது. நிறுவன உணவுத் திருவிழா காரணமாக, சுற்றுலா கழக சிற்றுண்டி விடுதியும் நடத்தப்படாததாக கூறப்படும் நிலையில், அரசு விடுதிக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.