திருவள்ளூர் : பூண்டி நீர்த்தேக்கத்தில் மீன் பிடிக்கச் சென்றபோது மாயமான மீனவர், பிணமாக மீட்கப்பட்டார்.திருவள்ளூர் அடுத்த, கொழுந்தலுாரைச் சேர்ந்தவர், ஏழுமலை மகன் விஜயன், 30. மீனவரான இவர், நேற்று முன்தினம் பூண்டி நீர்த்தேக்கத்தில், பைபர் படகில் மீன் பிடிக்கச் சென்றார்.
அவர் சென்று வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.அவரது மனைவி மற்றும் உறவினர்கள் வந்து பார்த்தபோது படகு மட்டும் இருந்தது; அவரைக் காணவில்லை. இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசாருக்கும், திருவள்ளூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் வந்து, விஜயனை தேடினர். ஆனால் இரவு நேரம் என்பதால் அவரது உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.நேற்று காலை மீண்டும் தீயணைப்புத் துறையினர் தேடி, 2 கிலோ மீட்டர் தொலைவில், சேற்றில் சிக்கிய அவரது உடலை மீட்டனர்.இது குறித்து, புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.