செங்கல்பட்டு : செங்கல்பட்டில் மது அருந்தும்போது, தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் இடையே ஏற்பட்ட தகராறில், ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.செங்கல்பட்டு அடுத்த, மேலமையூர் கே.கே.நகரைச் சேர்ந்த ராஜசேகரன் மகன் விஜய் என்ற விஜயகுமார், 35; செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனை எதிரே, பெரியார் நகரில் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில், ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணிக்கு விஜயகுமாரும், அவருடன் பணிபுரியும் ஒழலுார் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த அஜித், 28, என்பவரும்,ஓய்வெடுக்கும் அறையில் மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த அஜித், வெளியே சென்று பெரிய கல்லை துாக்கி வந்து, விஜயகுமார் மீது போட்டார். தலை நசுங்கி, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.தகவலறிந்து வந்த செங்கல்பட்டு டவுன் போலீசார், சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், அஜித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.