திருத்தணி : முழு ஊரடங்கான நேற்று, திருமண முகூர்த்த நாள் என்பதால், திருத்தணி முருகன் மலைக்கோவிலில், நிர்வாகம் அனுமதியுடன் ஒன்பது திருமணங்கள் நடந்தன.கொரோனா தொற்று காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் பக்தர்கள் கோவில்களில் தரிசனத்திற்கு அனுமதியில்லை என அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, நேற்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் மூன்றாவது ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் நேற்று, திருமண சுபமுகூர்த்த நாள் என்பதால், திருத்தணி முருகன் மலைக்கோவிலில், நிர்வாக அனுமதியுடன் காவடி மண்டபம், உச்சி பிள்ளையார் மண்டபம் மற்றும் ஆர்.சி., மண்டபம் ஆகிய இடங்களில் மொத்தம் ஒன்பது திருமணங்கள் நடந்தன. ஒரு திருமணத்திற்கு, 15 - 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.திருமணம் முடிந்ததும்மணமக்கள் மற்றும் அவரது உறவினர்கள் தரிசனத்திற்கு தேர் வீதிக்கு சென்ற போது, அங்கு பக்தர்கள் போகாத வண்ணம் தடுப்பு அமைத்து கோவில் ஊழியர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதனால் மணமக்கள் மற்றும் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் தேர் வீதி தடுப்பு அமைத்த இடத்தில் இருந்தவாறு முருகப் பெருமானை வழிபட்டு சென்றனர்.கோவிலில் நடந்த ஒன்பது திருமணங்களும் தொற்று அதிகரிப்பு மற்றும் ஊரடங்கு அறிவிப்புக்கு முன், கோவில் நிர்வாகத்திடம், முறையாக திருமண கட்டணம் தொகை செலுத்தி முன்பதிவு செய்திருந்த திருமணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், நேற்று, முகூர்த்த நாள் என்பதால் திருத்தணி நகரில், 10க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களில் எளிமையான முறைகளை அரசு பிறப்பித்த விதிமுறைகள் கடைப்பிடித்து திருமணம் நடந்தது.