ஆர்.கே.பேட்டை, : நீர் நிரம்பிய ஏரியில் கொட்டபட்டு வரும் குப்பையால் நீராதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், நாகபூண்டி ஏரி ஆண்டு முழுதும் நீர் நிரம்பி காணப்படும். இதனால், இந்த பகுதியில் எல்லா காலத்திலும் விவசாயம் செழிப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.குறிப்பாக வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது. நாகபூண்டி ஏரியை ஒட்டி, ஆந்திர மாநில எல்லையில் உள்ள மலைகளில் இருந்து நாகபூண்டி ஏரிக்கு நீர்வரத்து உள்ளது. தற்போதும் ஏரி முழுதுமாக நிரம்பி உள்ளது. இந்நிலையில், அரசு உயர்நிலை பள்ளியை ஒட்டி, ஏரிக்கரையில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால், ஏரிநீர் மாசடைந்து வருகிறது.சுற்றுப் பகுதியில் முதன்மையான நீராதாரமான நாகபூண்டி ஏரி, மாசடைந்து வருவதால், பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துஉள்ளனர்.ஏரியில் குப்பை கொட்டுபவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.