சென்னை : விபத்தில் மாற்றுத்திறனாளியான செக்யூரிட்டிக்கு 19.14 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர், இளையகுமார், செக்யூரிட்டி. இவர், 2016 ஏப்ரலில், சிறுவாபுரியிலிருந்து, கும்மிடிப்பூண்டி நோக்கி பைக்கில் சென்றார்.பெருவயல் அருகே பைக் சென்று கொண்டிருந்த போது, அதிவேகமாக வந்த லாரி, இளையகுமார் பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் மாற்றுத்திறனாளியானார்.
மாற்றுத்திறனாளியானதற்கு 75 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் இளையகுமார் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணை, நீதிபதி பி.தங்கமணிகணேஷ் முன் நடந்தது. விசாரணையில மனுதாரருக்கு, 30 சதவீதம் நிரந்தர மாற்றுத்திறன் ஏற்பட்டது தெரிய வந்தது.மனுதாரருக்கு இழப்பீடாக 19.14 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க, நீதிபதி உத்தரவிட்டார்.