கடலுார் : முழு ஊரடங்கான நேற்று, திருவந்திபுரத்தில் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்ததால் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.
கடந்த 9ம் தேதி, 16ம் தேதி ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளை தொடர்ந்து, மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையான நேற்றும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று முகூர்த்த நாள் என்பதால், ஏராளமான திருமணங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஊடரங்கு காரணமாக, கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் வளாகத்தில் நேற்று திருமணங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், கோவிலுக்கு வெளியே உள்ள சாலையிலும், சுற்றியுள்ள மண்டபங்களிலும் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நேற்று நடந்தன. திருவந்திபுரத்தில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.சமூக இடைவெளியின்றி, முகக் கவசம் அணியாமல் மக்கள் கூடியிருந்தனர்.
கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. தகவலறிந்த கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார், திருமண நிகழ்வுகளில் உறவினர்கள் 10 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும், ஒரு திருமணம் முடிந்த பிறகே அடுத்த திருமண நிகழ்ச்சியை நடத்த வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும் என, அறிவுறுத்தினர்.தனியார் திருமண மண்டபங்களில் நடந்த திருமணத்தில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என, ஒலி பெருக்கி மூலம் எச்சரித்தனர். திறந்திருந்த கடைகளை மூடுமாறு அறிவுறுத்திய போலீசார், முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடை பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.