புதுச்சேரி : சமூக வலைதளங்களில் கவர்னர் அறிவிப்பு போன்று போலியாக ஊரடங்கு செய்தியை பரப்பிய வாலிபர் சைபர் கிரைம் போலீசில் சிக்கினார்.
புதுச்சேரி முழுவதும், வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், மற்ற நாட்களில் கடைகள் மதியம் 2.00 மணி வரை செயல்படும் என கவர்னர் தமிழிசை கூறியது போல சமூக வலைதளங்களில் பதிவுகள் உலா வந்தன.மேலும் அதில், வழிபாட்டு தலங்கள் ஊர்வலம் ஆகியவை தடை செய்யப்படுகிறது என கூறப் பட்டிருந்தது.பொது அமைதிக்கு அச்சம் ஏற்படுத்தும் நோக்கில் இந்த பொய்யான தகவலை பரப்பிய நபர்களை கண்டுபிடித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் வல்லவன் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.நீதிமன்ற அனுமதி பெற்று, கடந்த 18ம் தேதி வழக்கு பதிந்து, சைபர் கிரைம் போலீசார் விசாரணையை துவக்கினர்.சீனியர் எஸ்.பி., ராகுல் அல்வால் உத்தரவின் பேரில், எஸ்.பி., சுபம் சுந்தர்கோஷ் மேற்பார்வையில், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடினர்.விசாரணையில், பொய்யான தகவலை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தவர், புதுச்சேரி, உறுவையாறு கிராமத்தை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் பிரவீன் குமார்,31, என்பது தெரிய வந்தது.
சைபர் கிரைம் போலீசார் பிரவீன்குமாரை பிடித்து விசாரித்தனர்.அவர், கடந்த 5ம் தேதி, இணையத்தில் வெளியாகும் வார இதழ் ஒன்றில், ஊரடங்கு குறித்து கவர்னர் தமிழிசை கருத்து தெரிவித்து இருந்தார்.அந்த ஊரடங்கு செய்தியை, தேதியை மறைத்து பரப்பினால், எல்லோரின் கவனத்தையும் ஈர்க்கலாம் என்று எண்ணி, ஸ்கிரீன்ஷாட் எடுத்து 'வாட்ஸ் ஆப்' ஸ்டேட்டசில் வைத்தேன்' என தெரிவித்தார்.குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, பிரவீன்குமாரின் மொபைல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவருக்கு, குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு- 41ன் கீழ் நோட்டீஸ் வழங்கினர்.தனிப்படைக்கு பாராட்டுஇவ்வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய சைபர் கிரைம் தனிப்படை இன்ஸ்பெக்டர் கணேஷ், சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ், ஐ.ஆர்.பி.என்., தலைமை காவலர்கள் சிவக்குமார், அழகர் ஆகியோரை போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டினர்.