மதுரை : மதுரையில் ஊரடங்கை முன்னிட்டு தடையை மீறி தனியார் பஸ்கள் இயக்கப்படுவதை தடுக்க மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், ஆய்வாளர்கள் நேற்று இரவு சோதனையில் ஈடுபட்டனர்.
ஜன.,16 ஊரடங்கில் மதுரையில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்குவது தடுக்கப்பட்டது. அப்போது பயணிகள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு 11 ஆம்னி பஸ்கள் இயங்க அனுமதிக்கப்பட்டது. விதிமீறிய 11 பஸ்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதுபோல் நேற்று இரவும் சில பஸ்கள் இயக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது.
இதையடுத்து மதுரை சரக இணை போக்குவரத்து கமிஷனர் பொன்செந்தில்நாதன், விருதுநகர் துணை போக்குவரத்து கமிஷனர் இளங்கோவன் தலைமையில் நான்கு மாவட்டங்களை சேர்ந்த 7 ஆர்.டி.ஓ.,க்கள், 30 மோட்டார் ஆய்வாளர்கள் குழு மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், சிட்டம்பட்டி, கொடைரோடு மற்றும் திருமங்கலம் டோல்கேட் பகுதிகளில் சோதனை மேற்கொண்டு பஸ்கள் இயங்காமல் தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.