பல்லடம் : பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில், நுால் கோன் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது; பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கோவை மாவட்டம், சூலுாரில் இருந்து நுால் கோன் ஏற்றி ஒரு லாரி நேற்று காலை பல்லடம் நோக்கி வந்தது. பல்லடம், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, அண்ணாதுரை சிலை அருகே வளைவில் செல்லும்போது லாரி கவிழ்ந்து, ரோட்டோர சிக்னல் கம்பம் மீது மோதி நின்றது.லாரியில் இருந்த, 16 டன் நுால் கோன்கள் ரோட்டில் சிதறி விழுந்தன.
நல்வாய்ப்பாக, லாரி டிரைவர், கிளீனர் தப்பினர். நுால் கோன்கள் வேறு லாரிக்கு மாற்றப்பட்டன. கிரேன் உதவியுடன் கவிழ்ந்த லாரி அப்புறப்படுத்தப்பட்டது. லாரி கவிழ்ந்த பகுதியில் டிரான்ஸ்பார்மரும், சிக்னல் கம்பமும் உள்ளது. சிக்னல் கம்பம் மீது மோதி, லாரி நின்றதால், டிரான்ஸ்பார்மர் மீது மோதவில்லை.
மேலும், வழக்கமாக வாகன போக்குவரத்து நிறைந்த தேசிய நெடுஞ்சாலையில், ஊரடங்கு என்பதால், குறைந்த வாகனங்களே சென்றன. மக்கள் நடமாட்டமும் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.