பல்கலைகள், கல்லுாரிகள் சார்பில் தொலை நிலை கல்வி இயக்ககம் மற்றும் ஆன்லைன் வழிக்கல்வி சான்றிதழ், பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு தொலை நிலை கல்வி, ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கான விதிமுறைகளை கடந்த, 2020ம் ஆண்டு யு.ஜி.சி., மாற்றியமைத்தது.
ஒரு சில கல்வி நிறுவனங்கள் வெளிநபர்கள் மற்றும் தனியாருடன் ஒப்பந்தம் செய்துகொண்டு தொலை நிலை கல்வி பயிலும் மாணவர்களுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளன.
இதுகுறித்த புகார் யு.ஜி.சி.,க்கு சென்றது. இதையடுத்து, உயர் கல்வி நிறுவனங்கள் வெளி நபர்கள் அல்லது தனியார் மூலம் தொலை நிலை கல்வி மற்றும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தக் கூடாது என யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
மேலும், யு.ஜி.சி., விதிகள், சட்டங்களை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் இதுபோன்று ஆன்லைன் வகுப்புகள், தொலை நிலை கல்வி மூலம் வழங்கப்படும் பாடத்திட்டங்களில் சேரும் முன், அவை யு.ஜி.சி.,யால் அங்கீகரிக்கப்பட்டவையா என்பது குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.