கோவை: மாநிலம் தோறும் பருத்தி உற்பத்தி குறைந்து வருவது ஜவுளித்தொழில் செய்துவரும் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
சர்வதேச அளவில் பருத்தி உற்பத்தியில் நம் நாடு தற்போதும் இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறது. ஆனால் தற்போதைய விளைச்சலும், உற்பத்தியும் நம் நாட்டை கடை நிலைக்கு கொண்டுசேர்த்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நம் நாட்டில் ஒரு கேண்டி(355 கிலோ எடை கொண்டது) பஞ்சின் விலை, 80 ஆயிரம் ரூபாய். பஞ்சு விலை உயர்வுக்கு வரைமுறையோ, எல்லையோ இல்லாமல் யூகபேர வணிகத்தால் விலை உச்சத்துக்கு சென்றுவிட்டது.
நம் நாட்டின் பருத்தி விளையும் வடக்கு மண்டல மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான்(மேல்), ராஜஸ்தான் (கீழ்) ஆகியவற்றில், கடந்த, 2020-21ம் ஆண்டு, அக்., முதல் டிச., வரை, 47 லட்சத்து, 60 ஆயிரம் கேண்டி உற்பத்தியாகியுள்ளது.
2021-22 அக்., முதல் டிச.,வரை, 23 லட்சத்து, 46 ஆயிரத்து, 200 கேண்டி உற்பத்தியாகியுள்ளது; 24 லட்சத்து, 13 ஆயிரத்து, 800 கேண்டி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.குஜராத், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை கொண்ட மத்திய மண்டலத்தில், 2020-21 அக்., முதல் டிச., வரை, 92 லட்சம் கேண்டி உற்பத்தியாகியுள்ளது. 2021-2022 அக்., முதல் டிச., வரை, 68 லட்சத்து, 12 ஆயிரத்து, 500 கேண்டி உற்பத்தியாகியுள்ளது; 23 லட்சத்து, 87 ஆயிரத்து, 500 கேண்டி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தெலுங்கான, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஓடிசா உள்ளிட்ட பிறமாநிலங்களில், 2020-21 அக்., முதல் டிச., வரை 58 லட்சத்து, 25 ஆயிரம் கேண்டி உற்பத்தியானது; 2021-22 அக்., முதல் டிச., வரை, 29 லட்சத்து, 20 ஆயிரத்து, 200 கேண்டி உற்பத்தியாகியுள்ளது; 29 லட்சத்து, 4,800 கேண்டி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கடந்த, 2020- 21ம் ஆண்டில், 1 கோடியே, 97 லட்சத்து, 85 ஆயிரம் கேண்டியும், 2021-22ல், 1 கோடியே, 20 லட்சத்து, 78 ஆயிரத்து, 900 கேண்டியும் உற்பத்தியாகியுள்ளது. நடப்பாண்டு, 77 லட்சத்து, 6,100 கேண்டி பருத்தி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறையும், யூகபேர வர்த்தகமும் பருத்தி விலையை உயர்த்தியுள்ளது. இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலையில் மூழ்கியுள்ளனர்.
ஆராய்ச்சிகளை அதிகரிக்கணும்!
தென்னிந்திய நுாற்பாலைகள் சங்க தலைவர் செல்வன் கூறுகையில்,''மாநிலம் தோறும் பருத்தி உற்பத்தி குறைந்து வருவது ஜவுளித்தொழில் மேற்கொண்டு வரும் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பருத்தி விளைச்சலை பெருக்க வேளாண் ஆராய்ச்சிகளை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.