ஈரோடு: ஈரோடு பகுதியில், காளிங்கராயன் பாசனப்பகுதியில், இரண்டாம் போக சாகுபடி பணியை, விவசாயிகளை தொடங்கியுள்ளனர். பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கராயன் பாசன பகுதிக்கு திறந்து விடப்படும் தண்ணீர் மூலம், 15 ஆயிரத்து, 400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. முதல் போக நெல், வாழை, கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பயிர் சாகுபடி செய்யப்பட்டது. இதில் நெல் அறுவடை முடியும் தருவாயில் உள்ளது. மஞ்சள் அறுவடை விரைவில் துவங்க உள்ளது. இந்நிலையில் இரண்டாம் போக சாகுபடிக்கு, காளிங்கராயன் வாய்க்காலில் தொடர்ந்து தண்ணீர் வரத்தாவதால், நெல் அறுவடை முடிந்த நிலங்களில், தண்ணீரை நிரப்பி சமன்படுத்தும் பணி, உழவுப்பணி, நாற்று விடும் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். ஈரோட்டில் வைராபாளையம், கருங்கல்பாளையம் பகுதிகளில், இப்பணி தீவிரம் அடைந்துள்ளது. ஒரு வாரத்துக்குள் நாற்று விடும் பணி தொடங்கி விடும். இப்பகுதியில் மட்டும், 2,000 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்படும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.