திருப்பூர்;திருப்பூர் தெற்கு தாலுகா, வீரபாண்டி கிராமத்துக்கு உட்பட்டது கே.செட்டி பாளையம். அங்கு, 54 பேர் நிலம் வாங்கி, கட்டடம் கட்டி வசித்து வரும் நிலையில், கூட்டு பட்டாவை உடைத்து, தனிநபர் பட்டா வழங்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நிலத்தை கிரயம் வாங்கிய, மற்றொரு தரப்பினர், சட்ட விதிகளின்படி, கிரயம் பெற்று, வருவாய்த்துறை மூலம் பட்டா மாறுதல் செய்துள்ளதாகவும், தங்கள் பெயருக்கு பட்டா மாறுதல் செய்து கொடுக்க வேண்டுமெனவும், நேற்று கலெக்டரிடம் முறையிட்டனர்.மனுதாரர்கள் கூறியதாவது:கே.செட்டிபாளையம் பகுதியில், 13.63 ஏக்கர் நிலம், அண்ணன், தம்பி என, ஏழு பேருக்கு சொந்தமானதாக இருந்தது. அவர்களில், இரண்டு பங்கு இடமான, 3.88 ஏக்கரை, நாங்கள் விலைக்கு வாங்கி, விற்பனை செய்துள்ளோம்.மற்ற ஐந்து பங்கு நிலத்தை வாங்கியவர்கள், அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில், உண்மைக்கு மாறான தகவல் அளித்து, வருவாய்த்துறை பட்டா மாறுதல் செய்தது குறித்து குற்றம்சாட்டியுள்ளனர். முறைப்படி கிரயம் செய்துள்ளோம். கிரயம் செய்ததில், 2.53 ஏக்கருக்கு, பட்டா மாறுதல் நடக்காமல் இருக்கிறது; ஆர்.டி.ஓ., விசாரணை அடிப்படையில், விரைவில் பட்டா மாறுதல் செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.