திருப்பூர்:'அடுத்த ஐந்து மாதங்களுக்கு கப்பல் கன்டெய்னர் தட்டுப்பாடு மற்றும் கட்டண உயர்வு நீடிக்கும்' என்பதால், திருப்பூர் ஏற்றுமதி யாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள், ஐரோப்பா, அமெரிக்கா உட்பட பல்வேறு நாட்டு வர்த்தகரிடம் ஆர்டர் பெற்று ஆடை தயாரிக்கின்றன.
உற்பத்தி செய்யப்படும் ஆடைகள், சரக்கு பெட்டகங்களில் (கன்டெய்னர்) வைத்து, கப்பலில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.கொரோனாவுக்குப்பின், உலகளாவிய நாடுகளின் துறைமுகங்களில், சரக்கு கையாள்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, கன்டெய்னர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால், சரக்கு கப்பல் போக்குவரத்து கட்டணமும் உயர்ந்து காணப்படுகிறது.
உற்பத்தி செய்த ஆடைகளை கப்பலில் அனுப்ப போதிய கன்டெய்னர் கிடைக்காதது; குறித்த காலத்துக்குள் வர்த்தகருக்கு ஆடைகளை அனுப்பி வைக்க முடியாமை; போக்குவரத்து செலவினங்கள் அதிகரிப்பு ஆகியவற்றால் திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் பரிதவித்துவருகின்றன.கொரோனா அலை மீண்டும் வீசத்துவங்கியுள்ளதால், கன்டெய்னர் தட்டுப்பாடு மற்றும் கட்டணங்கள் இந்தாண்டும் தொடரும் நிலையே உருவாகியுள்ளது.
திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:கொரோனாவுக்குப் பின், கன்டெய்னர் கட்டணங்கள் தாறுமாறாக உயர்ந்துள்ளன. இதனால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள், வெளிநாடுகளுக்கு கப்பலில் ஆடைகளை அனுப்புவதற்கான செலவுகள் அதிகரித்துள்ளது.கன்டெய்னர் தட்டுப்பாடால், தயாரித்த ஆடைகளை குறித்த காலத்துக்குள் அனுப்பிவைக்கவும் முடிவதில்லை. நடப்பு ஆண்டு கன்டெய்னர் கட்டணம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
உலக நாடுகளில் கொரோனா மீண்டும் பரவத்துவங்கியுள்ளது. துறைமுகங்களில், தொழிலாளர் பற்றாக்குறை நீடிக்கிறது. அமெரிக்கா, அதிகளவு பொருட்களை இறக்குமதி செய்கிறது. அந்நாட்டின் கலிபோர்னியா மாகாண துறைமுக பகுதியில், 80க்கும் மேற்பட்ட கப்பல்கள், சரக்குடன் காத்திருக்கின்றன.சீன புத்தாண்டு நெருங்குகிறது.
அந்நாட்டினர் 15 நாட்களுக்கு மேல் விடுமுறையில் சென்றுவிடுவர்.அதனால், சீனா வசம் உள்ள கன்டெய்னர்கள் திரும்புவதில் காலதாமதம் ஏற்படும். எனவே, நடப்பு ஆண்டும், கன்டெய்னர் தட்டுப்பாடு மற்றும் கட்டண உயர்வு நீடிக்கும் நிலையை உள்ளது. வரும் ஜூன் மாதத்துக்கு பின், தேக்க நிலைகள் விலகி, கன்டெய்னர் கட்டணம் குறைய வாய்ப்பு உள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
நுால் உட்பட அனைத்து மூலப்பொருட்கள், ஜாப்ஒர்க் கட்டணங்கள் உயர்ந்துள்ள நிலையில், கன்டெய்னர் கட்டணம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுவது, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி துறையினருக்கு நெருக்கடி கொடுக்கிறது.ஏற்றுமதியாளர்கள், குறித்த காலத்துக்குள் ஆடை தயாரித்து, கப்பலில் அனுப்பிவைத்துவிடவேண்டும்.
காலதாமதம் ஏற்பட்டால், விமானங்களில் அனுப்ப நேரிடும்; இது, செலவை மேலும் அதிகரிக்கச் செய்துவிடும்.இவ்வாறு, அவர் கூறினார்.ஏற்றுமதியாளர்கள், குறித்த காலத்துக்குள் ஆடை தயாரித்து, கப்பலில் அனுப்பிவைத்துவிடவேண்டும். காலதாமதம் ஏற்பட்டால், விமானங்களில் அனுப்ப நேரிடும்; இது, செலவை மேலும் அதிகரிக்கச் செய்துவிடும்.