சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே கிழவயல் ஊராட்சியில் மக்களின் கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.எஸ்.புதுார் ஒன்றியத்துக்குட்பட்ட இந்த ஊராட்சியில் 2500 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
கிழவயல், சின்ன கிழவயல், பெரிய கிழவயல், சேர்வைகாரன்பட்டி, பொன்னடப்பட்டி, மணியாரம்பட்டி,, நல்லவன்பட்டி ஆகிய 6 உட்கடை கிராமங்களைக் கொண்ட பெரிய ஊராட்சியாக இருந்தும் இங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப வளர்ச்சி திட்டங்களும், நிதி ஒதுக்கீடும் இல்லை. சின்ன கிழவயல் கிராமத்தில் அங்கன்வாடி கட்டடம் பழுதடைந்து வாடகை இடத்தில் இயங்கிவரும் நிலையில் புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் அதிகாரிகள் பழைய கட்டடத்தை இடித்து தராததால் புதிய கட்டட கட்டுமானப் பணி தள்ளிப்போகிறது.இந்த ஊராட்சியில் பத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் பழுதடைந்து உடைந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. மக்கள் பலமுறை புகார் அளித்தும் மின்வாரியம் கண்டுகொள்ளவில்லை. சேர்வைக்காரன்பட்டியில் 6 மாதத்துக்கு முன்பு போடப்பட்ட 2 கி.மீ. தார்சாலை தரமில்லாமல் போடப்பட்டதால் புதிதாக சாலை அமைக்க மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் கண்துடைப்புக்காக சாலையில் பஞ்சர் மட்டும் பார்க்கப்பட்டுள்ளது.சின்ன கிழவயல் கிராமத்தில் இருந்து பொன்னடப்பட்டி, வெடத்தலாம்பட்டிக்கும் சேர்வைகாரன்பட்டியில் இருந்து தேத்தாம்பட்டிக்கும் புதிய இணைப்புச் சாலை அமைக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கிழவயல் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து 3 கி.மீ., தூரமுள்ள பொன்னடப்பட்டிக்கு தண்ணீர் பற்றாக்குறை காரணமாக குடிநீர் விநியோகிக்க முடியவில்லை. இதனால் காவிரி குடிநீர் இணைப்பு கிடைத்தும் மக்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே அப்பகுதி மக்களுக்காக கூடுதல் தொட்டி அமைத்து தண்ணீர் வினியோகிக்க வேண்டும்.
ஏ.வி.நாகராஜன், மேட்டுப்பாளையம்: பொன்னடப்பட்டி கிராமத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு 5 கி.மீ., தூரத்தில் உள்ள எஸ்.புதுாரில் ரேஷன் கடை உள்ளது. இதனால் மக்கள் அலைச்சலுடன் அவதிப்படுகின்றனர். இங்கேயே பகுதி நேர ரேஷன் கடை அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. மேட்டுப்பாளையத்தில் சாலைப் பணிக்கு இடையூறாக நடுரோட்டில் உள்ள மின்கம்பத்தை ஓரத்தில் மாற்றியமைக்க வேண்டும்.