கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனக்குழுவில் ரூ.பல கோடிக்கு மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.கொடைக்கானல் வனத்துறையின் கீழ் பாம்பார்புரம் கூட்டு வன மேலாண்மை குழு 10 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது.
வன சுற்றுலா தலங்களில் வரும் வருவாயில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளுதல், குழுவில் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது நோக்கம். இதன் பின் ஒருங்கிணைந்த வன சுற்றுலா மேம்பாடு என்ற தனி அமைப்பு மூலம் செயல்படத் துவங்கியது. இதில் ஒருவர் தலைவராக, ரேஞ்சர் செயலராக, 30 க்கும் மேற்பட்டோர் செயற்குழு உறுப்பினர்களாக உள்ளனர்.
சுற்றுலா தலங்களில் பார்வையாளர் கட்டண ரசீதில் குழுவின் பெயர் இடம் பெற்றிருக்கிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.பல கோடி வருவாய் ஈட்டுகிறது.பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரே தலைவராக செயல்படுகிறார்.வரவு, செலவு விபரங்கள் வெளியிடுவதில்லை.
புதிய வாகனங்கள் வாங்குவது உட்பட சுயநல நோக்கத்துடன் குழுவை வனத்துறை தவறாக பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. சூழல் சுற்றுலா காவலர்களுக்கும் சம்பளம் குறைந்த நாட்களே வழங்கப்படுவதாக மற்றொரு புகாரும் உள்ளது. வனக்குழுவில் உள்ள வரவு செலவுகளை தனி குழு அமைத்து விசாரித்தால் உண்மை வெளிச்சத்திற்கு வரும்.
சமீபத்தில் வனக்குழுவில் நடக்கும் முறைகேடுகள் குறித்து செந்தில்குமார் எம்.எல்.ஏ., அம்பலப்படுத்தினர். மேலும் அவர்,'வனக்குழுவை கலைத்து புதிய குழு அமைக்கப்படும்'எனவும் உறுதியளித்தார்.வன அலுவலர் திலீப் கூறுகையில்,''வனக்குழுவில் முறைகேடு நடக்கவில்லை. முறையாக குழு கூட்டம் நடக்கிறது'',என்றார்.