உடுமலை:போலீசாரால், பறிமுதல் செய்யப்பட்ட, வாகனங்களை ஏலம் விடாததால், குட்டைத்திடல் பகுதியில், புதிய குப்பைக்கிடங்கு உருவாகி வருகிறது.உடுமலை நகரின் மத்தியில் புகழ்பெற்று அமைந்துள்ளது குட்டைத்திடல். இங்கு, தேர்தல் காலங்களில், பிரசார கூட்டம், திருவிழாவின் போது, பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம்.குட்டைத்திடல் மைதானம் அருகில், போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. போலீசாரால், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் மற்றும் விபத்துக்குள்ளான வாகனங்களும், ஸ்டேஷன் முன், நிறுத்தப்பட்டு வந்தது.பல ஆண்டுகளாக, பறிமுதல் செய்த வாகனங்களை ஏலம் விடாததால், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் அப்பகுதியில், குவித்து வைக்கப்பட்டுள்ளது.குட்டைத்திடல் மைதானத்தை ஒட்டி உள்ள மரமே தெரியாத அளவுக்கு, வாகனங்கள் கிடக்கிறது. அப்பகுதி குப்பைக்கிடங்கு போல் மாறி, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலான வாகனங்கள் துருப்பிடித்து, எதற்கும் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது.இதனால் அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழலும் மாசுபடும் அபாயம் உள்ளது.இதே போல், ஸ்டேஷன் வளாகத்திலும், போலீசார் வாகனங்களை நிறுத்த கூட இடமில்லாத அளவுக்கு, பறிமுதல் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இவை அப்பகுதியினருக்கு இடைஞ்சலாகவும் உள்ளது.இவ்வாகனங்களை ஏலத்தில் விட, திருப்பூர் எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.