ஆண்டிபட்டி, : கோத்தலூத்து ஊராட்சி மணியாரம்பட்டியில் மக்கள் அடிப்படை வசதி இன்றி சிரமம் அடைகின்றனர்.ஆண்டிபட்டி ஒன்றியம், கோத்தலுாத்து ஊராட்சிக்கு உட்பட்டது
மூன்றாவது வார்டு மணியாரம்பட்டி. இங்கு ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை உள்ளது. இக்கிராமத்திற்கு கூட்டுக்குடிநீர் திட்ட இணைப்பு இருந்தும் குடிநீர் கிடைப்பது இல்லை. நிலத்தடி நீர் மட்டுமே அனைத்து தேவைகளுக்கும் பயன் படுத்துகின்றனர். பல ஆண்டுக்கு முன்பு அமைக்கப்பட்ட வடிகால் சேதமடைந்து கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி கொசு தொல்லை தீராத பிரச்சினையாக உள்ளது.
ஊரின் ஒட்டுமொத்த கழிவுநீரும் சமுதாயக்கூடம் எதிரில் தேங்கி அப்பகுதியில் உள்ள மேல்நிலை தொட்டிக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. அரசு ஆரம்பப் பள்ளி வளாகம், அங்கன்வாடி மையம் பகுதியில் கூட துப்புரவு பணி மேற்கொள்வதில்லை. கிராமத்தின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றுவது குறித்து அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை.
பொதுமக்கள் கருத்து:தண்ணீர் வசதி இல்லைடி.மலைச்சாமி, மணியாரம்பட்டி: கடந்த பல ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட சமுதாய கூடத்திற்கு இன்னும் தண்ணீர் வசதி இல்லை. மேற்கூரை சேதமடைந்து கான்கிரீட் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. சீரமைப்புக்கு நடவடிக்கை இல்லை. பாலக்கோம்பை கூட்டு குடிநீர் திட்டத்தின் பயன்கள் இக்கிராமத்திற்கு கிடைக்கவில்லை. உப்புநீரை குடிநீராக பயன்படுத்துகிறோம்.பயன்பாட்டிற்கு வராத சுகாதார வளாகம்எம்.தெய்வம், விவசாயி: பல ஆண்டுக்கு முன் ஊரணியின் பள்ளத்தில் கட்டப்பட்ட பெண்கள் சுகாதார வளாகத்தை இன்றளவும் பயன்படுத்த முடியவில்லை.
அடிக்கடி மராமத்து பணி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் நடவடிக்கை இல்லை. இதனால் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தும் அவலம் நீடிக்கிறது. அப்பகுதியில் உள்ள மோட்டார் அறை இடிந்து விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது.தெருவில் ஓடும் கழிவுநீர்பி.வளர்மணிராஜா: மணியாரம்பட்டி 2-வது தெருவில் வடிகால் வசதி இல்லாததால் தெருவில் தேங்கும் கழிவு நீரை கடந்து வீடுகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. மெயின் ரோட்டில் உள்ள மேல்நிலைத் தொட்டியில் கான்கிரீட் மேல் மூடி சேதமடைந்ததால் தேக்கப்படும் நீருக்கு பாதுகாப்பு இல்லை. தொட்டி முழுவதையும் அப்புறப்படுத்தி புதிய மேல்நிலைத்தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்கள் சுகாதார வளாகத்திற்கு ஆட்களை தனியாக நியமித்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.ரூ.5 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்ஏ.சண்முகம், தலைவர், கோத்தலுத்து ஊராட்சி: ஊராட்சியில் கோத்தலூத்து, மறவபட்டி, வரதராஜபுரம், மணியாரம்பட்டி, ஆகிய கிராமங்கள் உள்ளன. அரசு மூலம் ஒதுக்கும் நிதியில் அனைத்து பகுதிகளிலும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
நிதி ஒதுக்கீடு கூடுதலாக கிடைக்கும் பட்சத்தில் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். மணியாரம்பட்டியில் சமீபத்தில் ரூ. 2 லட்சம் செலவில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. ரூ. 3 லட்சம் மதிப்பில் சிமென்ட் ரோடு அமைக்கப்பட உள்ளது. அவசிய பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.