உத்தமபாளையம் : கணவன், மனைவி கொலை செய்து 75 நாட்களை கடந்தும் வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இன்றி போலீஸ் திணறும் நிலை ஏற்பட்டு உள்ளது.
உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் வசித்தவர் கருப்பையா 80 , மனைவி சிவகாமி 70. சலவை தொழிலாளர்களான இவர்களது மகன்கள், மகள்கள் திருமணமாகி கேரளா, வெளியூர்களிலும் வசிக்கின்றனர். வசதியாக வாழ்ந்துள்ளனர். 2021 நவ.,11 ல் வீட்டில் கணவன், மனைவி கைகள் கட்டிய நிலையில் கொலையாகினர். உத்தமபாளையம் போலீசார் தனிப்படைகள் அமைத்தும், மோப்ப நாய் வரவழைத்து, தடயங்களை சேகரித்தனர். ஆனால் கொலை நடந்து 75 நாட்களை கடந்தும் இதுவரை புலனாய்வில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. வழக்கு பதிவு செய்து 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அல்லது கோர்ட்டில் மனு செய்து கூடுதல் அவகாசம் பெற வேண்டும். இதற்கிடையே குற்றவாளிகள் முன்ஜாமின் பெற வாய்ப்பு உள்ளன. இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்ய வேண்டும். போலீசாரிடம் கேட்டபோது, '' சம்பவம் நடந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் தான் புலனாய்வில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது'', என்றனர்.