உலகம் முழுதும் கொரோனா மூன்றாம் அலை மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது.புதுச்சேரியில் ஒமைக்ரான் பாதிப்பு இரண்டு பேருக்கு கண்டறியப்பட்டது.
மேலும், ஒமைக்ரான் அறிகுறி உள்ளவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.பரிசோதனை முடிவுகள் வர 20 முதல் 25 நாட்கள் ஆனது. அதற்குள், ஒமைக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பி விட்டனர்.ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் அதே சிகிச்சை தான் வழங்கப்பட்டு வருகிறது.பரிசோதனை முடிவுகள் வர தாமதம் ஏற்படுவதாலும், பரிசோதனை கட்டணம் அதிகம் என்பதாலும், புதுச்சேரியில் ஒமைக்ரான் பரிசோதனை கடந்த சில வாரங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது.
இருப்பினும், மாநிலத்தில் அதிகரித்து வரும் தொற்று பரவலில், ஒமைக்ரான் பாதித்தவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்று தெரியவில்லை.ஒமைக்ரானால் கடுமையான பாதிப்பு ஏற்படும் சாத்தியம் குறைவு என்றாலும், வைரஸ் எப்படிப்பட்ட தாக்கத்தை இனிமேல் ஏற்படுத்தும் என்பதை முழுமையாகக் கணிக்க முடியாது. எனவே, உருமாறியுள்ள ஒமைக்ரான் குறித்து தொடர் ஆராய்ச்சி மேற்கொண்டு அதற்கேற்ப சிகிச்சை அளிப்பது முக்கியம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை மணி அடித்து வருகின்றனர்.எனவே, புதுச்சேரியிலேயே ஒமைக்ரான் பரிசோதனை கூடம் அமைக்க சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.இதற்காக நவீன ஆய்வக கருவிகளை வாங்குவதற்கான டெண்டர் பணிகளை துவக்கி உள்ளது.புதுச்சேரியில் ஒமைக்ரான் ஆய்வகம் அமைக்க நாட்டின் முன்னணி ஆய்வக நிறுவனங்கள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றன.
டெண்டர் இறுதி செய்ததும், கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரியில் ஒமைக்ரான் ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது.இதன் மூலம் உடனுக்குடன் பரிசோதனை முடிவுகள் சுகாதாரத் துறைக்கு கிடைக்கும். அத்துடன் எந்த மருத்துவ ஆய்வகத்தையும் சார்ந்திராமல், தினசரி பரிசோதனை எண்ணிக்கையை எட்டாயிரம் வரை அதிகரிக்க முடியும் என்பது குறிப்பிடதக்கது.எச்சரிக்கை தேவைடாக்டர்கள் கூறும்போது நுரையீரல் செல்களின் மேற்பரப்பில் 'டி.எம்.பி.ஆர்.எஸ்.எஸ் 2' என்ற புரதம் இருக்கிறது. இந்தப் புரதமே நுரையீரலுக்குள் கொரோனா வைரஸ் நுழைவதற்கு வழிவகுக்கிறது. ஆனால், ஒமைக்ரான் வைரஸ் இந்தப் புரதத்தை இறுக்கமாகப் பற்றிக் கொள்ளவில்லை.
இதன் விளைவாக, டெல்டா வேற்றுருவைப் போல், ஒமைக்ரான் வேற்றுருவால் நுரையீரலுக்குள் ஊடுருவி, பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை.சுவாசக் குழாய், மூக்கு, தொண்டை ஆகியவற்றில் மட்டும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகமாக இருப்பதால், அது எளிதாகவும் அதிவேகமாகவும் பரவுகிறது. ஒமைக்ரான் தொற்றால் கடுமையான பாதிப்போ மரணமோ ஏற்படும் சாத்தியம் குறைவாக இருப்பது போல் தோன்றினாலும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என்றனர்.