புதுச்சேரி-'கவர்னர் தமிழிசை இரு மாநிலங்களில் தேசியக் கொடி ஏற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது' என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது;புதுச்சேரியின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்ட தெலுங்கானா கவர்னர் தமிழிசை, புதுச்சேரியின் முழு நேர கவர்னராக செயல்படுகிறார். குடியரசு தினத்தன்று கவர்னர் தமிழிசை, தெலுங்கானா மற்றும் புதுச்சேரியில் தேசிய கொடியேற்றுவார் என தகவல் வந்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு, புதுச்சேரி கவர்னர் கூடுதல் பொறுப்பு பதவி வகித்ததால், மத்திய உள்துறை அமைச்சகத்தில் அனுமதி பெற்று, முதல்வராக இருந்த ரங்கசாமி, குடியரசு தின விழாவில் தேசிய கொடியேற்றினார்.கவர்னர் தமிழிசை புதுச்சேரியில் தேசியக் கொடி ஏற்ற உரிமை உள்ளது. ஆனால், இரு மாநிலத்தில் கொடி ஏற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. கவர்னர் இரு மாநிலத்தில் கொடி ஏற்றுவது கசப்பான சம்பவம்.கவர்னர் பரந்த மனதுடன், முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்ற ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அதை கவர்னர் செய்யத் தவறி விட்டார்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தும், கவர்னர் தமிழிசை புதுச்சேரி மாநில நிர்வாகத்தை தன்னிச்சையாக செய்து வருகிறார். இது அரசுக்கு அவ பெயரை ஏற்படுத்தும்.குண்டும் குழியுமான சாலைகளை சரிசெய்ய நிதி பற்றாக்குறை என காரணம் கூறுகின்றனர். மத்திய அரசிடம் நிதி பெறாமல், ஆளும் அரசு டம்மி அரசாக செயல்படுகிறது.புதுச்சேரி நிர்வாகம் ஒட்டுமொத்தமாக சீரழிந்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முதல்வர் ரங்கசாமி அதிகாரத்தை தன் கையில் எடுத்து, வாக்குறுதிகளை செயல்படுத்த வேண்டும். புதுச்சேரியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.