விழுப்புரம்-போக்குவரத்து விதிமுறை மீறி வாகனங்களில் ஏர் ஹாரன் பயன்படுத்துவோர் மீது டிராபிக் போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதில், கார், வேன்கள், லாரி உட்பட மற்ற வாகனங்களை விட அதிகளவு இரு சக்கர வாகனம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.பஸ்களில் ஏர் ஹாரன்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது இரு சக்கர வாகனங்களிலும் ஏர்ஹாரன்களை பயன்படுத்தி வருகின்றனர்.நகர பகுதிக்குள் ஏர் ஹாரன்களை பயன்படுத்துவதால் பிற வாகன ஓட்டிகள் அச்சமடைவதுடன், விபத்தும் ஏற்படுகிறது. சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு செவித்திறனும் பாதிக்கப்படுகிறது.போக்குவரத்து விதிகளின்படி, மக்களுக்கு இடையூறு அல்லாத வகையில் குறிப்பிட்ட 'டெசிபல்' ஒலி எழுப்பும் ஹாரன்களை மட்டுமே வாகனங்களில் பயன்படுத்த வேண்டும்.அதுவும் தேவைப்படும் போது மட்டுமே ஒலி எழுப்ப வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. மோட்டார் வாகன சட்டப்படி, 70 டெசிபல் அளவுக்கு, ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்த வேண்டும்.80 - 90 டெசிபலுக்கு மேல் ஹாரன் சத்தத்தால், காது கேளாமை உள்ளிட்ட பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். இந்த சூழலில், விழுப்புரம் மாவட்டத்தில் செல்லும் உள்ளூர், வெளியூர் வாகனங்களில் ஏர் ஹாரன்கள் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. பொரும்பாலான பஸ்கள் போட்டி போட்டுக் கொண்டு சாலையில் செல்லும் போது தொடர்ந்து இடைவிடாமல் ஏர் ஹாரனை பயன்படுத்திச் செல்கின்றனர்.பெரும்பாலும், வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் அந்தந்த வாகனத்திற்கு ஏற்றபடி, குறிப்பிட்ட டெசிபல் அளவுடன் ஹாரனை பொருத்திக் கொடுக்கின்றனர். ஆனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பஸ் டிரைவர்கள் தங்கள் வாகனங்களில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப விதவிதமான ஏர் ஹாரன்களை பயன்படுத்துகின்றனர்.
புதுச்சேரி - விழுப்புரம் செல்லும் தனியார் பஸ்களில் அதிகளவு ஏர் ஹாரன்கள் பயன்படுத்தப்படுகிறது.ஏர் ஹாரன் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும். மாசு கட்டுபாட்டு துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குரவத்துத் துறை அறிவுறுத்தியும் ஏர் ஹாரன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.விழுப்புரம் மாவட்டத்தில், போக்குவரத்து போலீசார், வட்டார போக்குவரத்து துறையோடு இணைந்து விதிமுறை மீறி வாகனங்களில் ஏர் ஹாரன்கள் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.