சென்னை--பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும், 'லேண்ட்லைன்' சேவை குறைபாடு தொடர்பாக, நம் நாளிதழில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சென்னையின் பல்வேறு பகுதிகளில், பிரதான கேபிள்கள் சரி செய்யும் பணி துவங்கியுள்ளது.பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் விருப்ப ஓய்வு திட்டம் அமலுக்கு பின், லேண்ட்லைன் சேவை பராமரிப்பு பணிகள், தனியார் ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன.ஒப்பந்த நிறுவனங்கள் முறையாக செயல்பாடததால், லேண்ட்லைன் இணைப்புகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தன.இது தொடர்பாக நம் நாளிதழில் சமீபத்தில் செய்தி வெளியானது. இதையடுத்து, சென்னை பி.எஸ்.என்.எல்., தலைமை பொது மேலாளர் வி.கே.சஞ்சீவி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.இதையடுத்து, சென்னை வடமேற்கு துணை பொதுமேலாளருக்கு கீழ் உள்ள பல்வேறு பகுதிகளில், கேபிள் சரி செய்யும் பணி நடந்து வருகிறது.இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, லேண்ட்லைன் சேவை வழங்கும், பிரதான கேபிள்களில் பழுதுகள் நீக்கும் பணி நடந்து வருகிறது.பி.எஸ்.என்.எல்., அலுவலகத்திலிருந்து, பிரதான பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளுக்கு செல்லக் கூடிய கேபிள்கள், சரி செய்யப்பட்டு வருகின்றன.புரசைவாக்கம் நான்சி தெருவில், கேபிள்கள் சரி செய்யப்பட்டுவிட்டன. ஓட்டேரி பகுதியில் செல்லப்பா மற்றும் ஸ்டிராகன்ஸ் தெருவிலும், கேபிள் சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் வாயிலாக, லேண்ட்லைன் சேவையில் உள்ள பிரச்னைகள் சரி செய்யப்பட்டு வருகின்றன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.