அம்பத்துார்---புறவழிச்சாலையின் அணுகு சாலை சந்திப்புகள் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி, மழை நீர் வடிகாலில் விழுந்து, விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.சென்னை புழலில் இருந்து தாம்பரம் வரையிலான, 32 கி.மீ., துார புறவழிச்சாலையின் அணுகு சாலையில், அதை ஒட்டிய நகர்ப்புறங்களில் வசிப்போரின் போக்குவரத்து வசதிக்குரிய, இணைப்பு சாலைகளுக்கான நுழைவு பாலங்களும் உள்ளன. புறவழிச்சாலையின் இருபக்கமும், 2 அடி அகலம், 10 அடி ஆழம் உடைய திறந்தவெளி மழை நீர் வடிகால் உள்ளது. அந்த வடிகால்களில், பெரும்பாலும், கழிவு நீரே நிரம்பி உள்ளது.புழல் சூரப்பட்டு, ஜெ.ஜெ., நகர் அடுத்த முகப்பேர் மேற்கு ஏரித்திட்ட பகுதிகளில், மழை நீர் வடிகாலை ஒட்டி, அணுகு சாலைகள் சேதமடைந்துள்ளன. புழல், அம்பத்துாரில் இருந்து நொளம்பூர், மதுரவாயல் ஆகிய பகுதிகளுக்கு சென்று வரும் வாகன ஓட்டிகள், இந்த சந்திப்புகளை கடந்து சென்று வருகின்றனர். கடந்தாண்டு நீடித்த பலத்த மழையால், மேற்கண்ட சாலை சந்திப்புகள், மிக மோசமாக சேதமடைந்துள்ளன. இரவில், அந்த பகுதியை கடப்போர், சாலையின் இரு பக்கமும் உள்ள சேதத்தால், நிலைதடுமாறி, அங்குள்ள 10 அடி ஆழ மழை நீர் வடிகாலில் விழுந்து, விபத்தில் சிக்குகின்றனர். விபத்து, உயிரிழப்பை தடுக்க, வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில், போக்குவரத்து போலீசார் தற்காலிக தடுப்பு அமைத்துள்ளனர். ஆனாலும், விபத்துகள் தொடர்கின்றன. தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.