ஆவடி--ஆவடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 'அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்' கருவி சரிவர வேலை செய்யாததால், கர்ப்பிணிகள் தனியார் மருத்துவமனைகளை நாடிச் செல்கின்றனர்.ஆவடி, புதிய ராணுவ சாலை-, பூந்தமல்லி நெடுஞ்சாலை-, சின்னம்மன் கோவில் தெரு சாலை ஆகிய மூன்று சாலைகள் சந்திக்கும் முச்சந்தியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்திற்கு ஆவடி, பருத்திப்பட்டு, கோவர்த்தனகிரி, ஜே.பி., எஸ்டேட், மூர்த்தி நகர், சீனிவாசா நகர், அசோக் நகர் நிரஞ்சன் நகர் உள்ளிட்ட பகுதி மக்கள் மருத்துவ தேவைகளுக்கு செல்வர்.இந்த பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்காக செல்கின்றனர். இதற்காக சிறப்பு மகப்பேறு மருத்துவர் குறிப்பிட்ட நாளில் மட்டும் அங்கு சென்று, கர்ப்பிணிகளுக்கு ஆலோசனை வழங்குவர்.இந்த சுகாதார நிலையத்தில் சிசுவின் துடிப்பு, ஆரோக்கியத்தை காண்பதற்கு 'அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்' கருவி உள்ளது. அந்தக் கருவி சரிவர வேலை செய்யாததால், தனியார் மருத்துவமனைகளை தேடிச் செல்லும் நிலைக்கு கர்ப்பிணிகள் தள்ளப்பட்டுள்ளனர்.இதனால், திருவள்ளூர் மாவட்ட சுகாதார அதிகாரிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களை ஆய்வு செய்து, அங்குள்ள பழுதான உபகரணங்களை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.