சென்னை-வாடிக்கையாளர்களின் வசதிக்காக, 'வாட்ச்' வாயிலாக தொடர்பில்லா பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும், 'சி.யூ.பி., ஈசிபே பிட்னெஸ் வாட்ச் டெபிட் கார்டு' என்ற புதிய வசதியை, சிட்டி யூனியன் வங்கி அறிமுகம் செய்துஉள்ளது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக, தொடர்பில்லா பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் வகையிலான, 'சி.யூ.பி., ஈசிபே பிட்னெஸ் வாட்ச் டெபிட் கார்டு' என்ற அறிமுக விழா, சிட்டி யூனியன் வங்கி சார்பில், போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நேற்று நடந்தது.சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் என்.காமகோடி, ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் வெங்கடாச்சலம் இருவரும் இதை அறிமுகம் செய்தனர்.அப்போது, சிட்டி யூனியன் வங்கியின் மேலாண்மை இயக்குனர் காமகோடி பேசியதாவது:தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்றுக்கொள்வதில், சிட்டி யூனியன் வங்கி முதன்மையாக உள்ளது. வாடிக்கையாளர்கள் எளிதாக பணம் பரிவர்த்தனை செய்ய, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். டிசம்பரில், 'கீ செயின்' வாயிலாக பணம் பரிவர்த்தனை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.அதைத்தொடர்ந்து, 'வாட்ச்' வாயிலாக பணம் பரிவர்த்தனை செய்யும், சி.யூ.பி., ஈசிபே பிட்னெஸ் வாட்ச் டெபிட் கார்ட்அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வாட்ச் வாயிலாக பணம் பரிவர்த்தனைக்கு மட்டும் இல்லாமல், ரத்த கொதிப்பு, வெப்பநிலையும் அறியலாம்.வாட்ச் வாயிலாக பணம் பரிவர்த்தனை செய்யும் திட்டத்தை, நாட்டிலேயே முதல் முறையாக, சிட்டி யூனியன் வங்கி தான் அறிமுகப்படுத்தியுள்ளது.