வரலாற்று தேடலுக்கான நெருப்பை மூட்டியவர்; தொல்லியல் அறிஞர் நாகசாமி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

25 ஜன
2022
08:25
பதிவு செய்த நாள்
ஜன 25,2022 08:21மிழக தொல்லியல் துறையின் முதல் இயக்குனர் இரா.நாகசாமி, 92. வயது மூப்பு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இந்திய வரலாற்றில், அசோகர் காலத்தில் இருந்து தான் எழுத்துகள் தோன்றின என்ற கருத்து இருந்த காலத்தில், தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் துறை அலுவலர்களை அனுப்பி, காலத்தால் முந்திய தமிழ் கல்வெட்டுகளை கண்டறிந்து, இந்திய தொல்லியல் அறிஞர்களை அழைத்துக் காட்டியவர்.
சிலப்பதிகாரமும், பூம்புகாரும் புனைவு என்ற கருத்து இருந்த காலத்தில், தமிழகத்தில் முதன்முதலில் கடலுக்கடியில் ஆய்வு செய்து, சங்க சோழர்களின் தலைநகரான பூம்புகாரை வெளிக்காட்டியவர். பண்டைய தெற்காசிய வரலாறு, கலை, கலாசாரம் குறித்த ஆழ்ந்த புலமை உடையவர். அவரது மறைவு, தொல்லியல் ஆய்வாளர்களுக்கு பேரிழப்பாகும். அவர் குறித்து அறிஞர்களின் கருத்துகள்:

கி.ஸ்ரீதரன், முன்னாள் துணை கண்காணிப்பாளர், தமிழக தொல்லியல் துறை: தமிழக மின்சார வாரியத்தில், நான் பணியாற்றினேன். அப்போது, பத்திரிகைகளுக்கு ஆய்வு கட்டுரைகள் எழுதுவது, கருத்தரங்கங்களில் பங்கேற்பது என, என் ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்தேன். அவற்றை படித்த தொல்லியல் துறை இயக்குனர் நாகசாமி, எனக்கு கடிதம் எழுதி அழைத்தார்.
என் ஆர்வம் குறித்து அறிந்ததும், தொல்லியல் துறையில் பணிக்கு சேர்த்துக் கொண்டார். நானும் ஈடுபாடுடன் பணி செய்தேன். தமிழகத்தில் கங்கைகொண்ட சோழபுரம், கொடுமணல், அழகன்குளம் ஆகிய இடங்களில் 1980களில் அகழாய்வுகளை மேற்கொள்ள, அரசிடம் அனுமதி கோரினார். ஏற்கனவே, அவ்விடங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் அவர் அறிந்திருந்தார். உரிய விளக்கங்களை அரசுக்கு வழங்கியதால் அனுமதி கிடைத்தது.
கங்கைகொண்ட சோழபுரம் அருகில், மாளிகை மேட்டில் நடந்த அகழாய்வில் நான் பங்கேற்றேன். அங்கு, சோழர்கால அரண்மனை பகுதிகளையும், சோழர்கால நாணயங்களையும் கண்டறிந்தோம்.

அதுகுறித்து, சென்னையில் இருந்த நாகசாமியிடம் தெரிவித்ததும், உடனடியாக அகழாய்விடத்துக்கு வந்து, கொட்டகை அமைத்து தங்கி, அணுவணுவாக ஆராய்ந்தார். ராஜேந்திர சோழன் குறித்த ஆய்வு முடிவுகளை தெரிவித்து, அங்கு கருத்தரங்கம் நடத்தியதோடு, கள அருங்காட்சியகம் அமைத்தார். அவர், 4௦ ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இடங்களில் தான், இன்றும் அகழாய்வுகள் தொடர்கின்றன.

அந்தளவு தொல்லியல் எச்சங்கள் அங்கு கிடைக்கின்றன. அவர், ஒரு பணியை செய்யும் முன், அதைப்பற்றிய அனைத்து தகவல்களையும் சேகரித்திருப்பார். அவர், எங்களைப் போன்றோரை தொடர்ந்து உற்சாகப்படுத்தினார். எங்கள் குருவின் மறைவு எங்களுக்கு பேரிழப்பு.

பத்மாவதி, முன்னாள் கல்வெட்டு ஆய்வாளர், தமிழக தொல்லியல் துறை: திருநெல்வேலியில், நான் 1975ல் எம்.ஏ., தமிழ் இலக்கியம் படித்து, அடுத்து என்ன படிப்பது என யோசித்த போது, தமிழக தொல்லியல் துறை சார்பில், கல்வெட்டியல் குறித்த பட்டய படிப்பு உள்ளதை அறிந்து, அதில் சேர்ந்தேன். அப்போது, எங்களுக்கு ஆசிரியராக இருந்தவர் நாகசாமி. நாங்கள் இப்போதும் அவரை, 'வாத்தியார்' என்று தான் அழைப்போம்.

சங்க இலக்கியங்களை வெறும் பாடல்களாக மட்டுமே, நாங்கள் படித்து அறிந்திருந்த போது, எங்களை கள ஆய்வுக்கு அழைத்துச் சென்று, சங்க கால தமிழ் எழுத்துகளையும், நடுகல்லையும் காட்டினார். நாங்கள், சங்க காலத்துக்கே சென்றோம். கள ஆய்வில் கால்கோல், நீர்ப்படை என்னும் தொல்காப்பிய சொற்களை, வாழ்வியல் வடிவங்களாக பார்த்தேன். எங்களுக்கு தமிழின் வளர்ச்சியை, எழுத்துகளின் வடிவங்களில் இருந்து, அவர் தான் விளக்கினார்.

தமிழர்களின் வரலாறு என்பது, கட்டடம், கலை, ஓவியம், சிற்பம், போர், வீரம், படை, வெற்றி, தோல்வி, நிர்வாகம், அரசு, குடிமக்கள், கடமை, உரிமை, ஊதியம், வரி, அபராதம், நன்கொடை, நில அளவை, நீர் மேலாண்மை என்னும் பல கூறுகளால் ஆனது. அவற்றை ஒருங்கே, கல்வெட்டுகளில் அறியும் வாய்ப்பு, அவரால் கிடைத்தது.

தற்காலத்தில் இருந்து சங்க காலத்தை, மண்ணடுக்குகளின் வாயிலாக அகழாய்வில் நாங்கள் கண்டடைந்தோம். அகழாய்வுகளில் நாங்கள் கண்டெடுத்தவை பொருட்கள் அல்ல; சங்க இலக்கியங்களுக்கான சாட்சியங்கள். கல்வெட்டுகளில் நாங்கள் படித்தவை எழுத்துக்கள் அல்ல; மன்னர்கள், ஊராரின் காட்சிகள்.
தமிழக வரலாற்று தேடலுக்கான நெருப்பை மூட்டியவர் நாகசாமி. அது, இப்போதும் எங்களுக்குள் எரிந்து கொண்டிருக்கிறது.கோவில்கள் என்பவை வெறும் வழிபாட்டுக்கான இடங்கள் அல்ல; அவை, நிர்வாகம் செய்யும் இடம், கல்வெட்டுகளின் ஆவணக்காப்பகம். அது, கருவூலம், மருத்துவமனை, கல்விக்கூடம், மடம், தொழிற்கூடம் என பன்முகம் கொண்டது. கோவில் கட்டுவது, ஊர் அமைப்பது குறித்த இலக்கணங்களை, அவர் தான் எங்களுக்கு விளக்கினார். பல நுால்களை எழுத அவர் தான் ஊக்கியாக இருந்தார். தன் இறுதிகாலம் வரை, அவர், அனைத்து கலைகள் மீதும், வரலாற்றின் மீதும் தீராத ஆர்வமும், தேடலும் உடையவராக இருந்தார். அவரின் இழப்பு, தமிழகத்துக்கே இழப்பு தான்.

நடன காசிநாதன், முன்னாள் இயக்குனர், தமிழக தொல்லியல் துறை: தமிழக தொல்லியல் துறையில், நான் பணியில் சேர்ந்த போது, எங்களை போன்ற அலுவலர்களை, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி, கல்வெட்டுகளை கண்டறிந்து, அவற்றை படியெடுத்து வரச்சொன்னார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்த நுாற்றுக்கும் மேற்பட்ட நடுகற்களையும், கல்வெட்டுகளையும் நான் படியெடுத்து வந்தேன். அதை பெரிய சாதனை என பாராட்டியதோடு, அறிஞர்களை அழைத்து, அந்த படிகளை, தொல்லியல் துறை அலுவலகத்தில் காட்சிப்படுத்தி, கருத்துக்களை கேட்டார்.
அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில், நானும், அமலநாதனும் கண்டறிந்த கல்வெட்டுகள் குறித்து, மூன்று தொகுதி நுால்களாக பதிப்பித்தோம். செங்கல்பட்டுக்கு அருகில் வசவசமுத்திரத்தில் அகழாய்வு செய்து, ரோமானியர்களின் குடுவைகள் உள்ளிட்ட பொருட்களை கண்டறிந்து, ரோமானிய வர்த்தக தொடர்புகளை கண்டறிந்தோம்.

பாண்டியர்களின் துறைமுகமான கொற்கையில் அகழாய்வு செய்து, பானை ஓடுகளில் உள்ள தமிழ் எழுத்துகள் கி.மு., 870 என்பதை கண்டறிந்தோம். தமிழக கோவில்களின் செப்புத்திருமேனிகளை பட்டியலிடச் சொன்னார். அதில், பல அரிய சிலைகள் கண்டறியப்பட்டன. அவற்றை பத்திரிகைகளுக்கு தெரிவித்தார்.

திருக்கோவிலுாருக்கு அருகில் உள்ள ஜம்பையில் கிடைத்த அதியமான் கல்வெட்டு, அசோகர் கல்வெட்டுடன் தொடர்புடையது என்பதை அறிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம், பூலாங்குறிச்சி மலைப்பாறையில் மிகப்பெரிய மூன்று கல்வெட்டை கண்டறிந்தோம். அதன் சிறப்புக்களை வெளிப்படுத்தினார். அவரின் இழப்பு, எங்களுக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கான இழப்பு.

நடிகர் கமல்: தமிழக வரலாற்றை அறிந்துகொள்வதில், ஒரு வரலாற்று ஆய்வாளராக, மூத்த தொல்லியல் ஆய்வாளர் நாகசாமியின் பங்களிப்பு முக்கியமானது. கல்வெட்டுகள், கலை மரபுகள், கோவில்கள் குறித்து இவர் எழுதிய நுால்கள், நம் அறிதலின் எல்லையை விஸ்தரிக்கக் கூடியவை.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
25-ஜன-202213:38:39 IST Report Abuse
சீனி பெரிதாக திரித்து சொல்லாமல், இவர் மக்களுக்கு உண்மையை சொன்னதால், திமுக அரசு இவரை கண்டுகொள்ளவில்லை.
Rate this:
Cancel
Sundaram Muthiah - Singapore,சிங்கப்பூர்
25-ஜன-202213:22:06 IST Report Abuse
Sundaram Muthiah இவர் ஒரு மேதை. சந்தேகம் இல்லை. ஆனால் நிறைய இடங்களில் சமஸ்கிருதம் தமிழை விட உயர்ந்தது என்ற தொனியில் பேசியிருக்கிறார். குறிப்பாக வட இந்திய ஊடகங்களில். தமிழ் சமஸ்கிருதத்தை விட பழமையானது என இப்போது நிரூபிக்க பட்டிருக்கிறது.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
25-ஜன-202210:20:43 IST Report Abuse
sankaseshan Dr. R. Nagasami is an archeological ரெசெர்ச் Scholor par excellence. Unfortunately government of TN has not given due respect to this Scholor. They should have given state funeral bur not given. On an earlier occasion he summeraised similarly between Bgavat Geeta and Thirukural which was condemned by dmk .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X