சென்னை: சென்னையில், முகக் கவசம் அணியாதவர்களுக்கு, 200 ரூபாய் முதல், 500 ரூபாயாக அபராத கட்டணம் வசூலிக்கப்படுவது நேற்று முதல் துவங்கியது. வாய், மூக்கு வரை முழுமையாக முக கவசம் அணியாதவர்களுக்கும் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என, மாநகராட்சி எச்சரித்துள்ளது.
தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரித்து வந்தாலும், மக்கள் முகக் கவசம் அணியாமல் அலட்சியம் காட்டுவது தொடர்கிறது.எனவே, அனைவரையும் முககவசம் அணிய வைக்கவும், கொரோனா பரவும் வேகத்தை குறைக்கவும், தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதில், இனி முககவசம் அணியாதோருக்கு, 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என, தெரிவித்திருந்தது.
சென்னை மாநகராட்சியை பொருத்தவரையில், ஏற்கனவே, 200 ரூபாய் அபராதத்திற்கான ரசீது இருந்ததால், அவற்றை மாற்றி, 500 ரூபாய்க்கான ரசீதாக அச்சிட, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டார்.அந்த ரசீது அச்சிடப்பட்டு தயாராக உள்ளதால், முககவசம் அணியாதோருக்கு, இன்று முதல் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மாநகராட்சியில், முககவசம் அணியாதோரிடம் இருந்து, கடந்த டிச., 31ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை, 70.23 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
முககவசம் அணியாதோருக்க 500 ரூபாய் அபராதம் விதிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில், ௨௦௦ ரூபாய் அபராத ரசீதுகள் மட்டுமே இருந்ததால், இந்த ரசீதை வழங்கி, 500 ரூபாய் வசூலித்தால் குழப்பம் ஏற்படும். எனவே, 5௦௦ ரூபாய்க்கான ரசீது புதிதாக அச்சிடப்பட்டது.
அவை, அச்சிடப்பட்டு வந்துள்ளதால், இன்று முதல் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும், முககவசம் அணியாதோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சென்னையில் சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இவற்றை மேலும் குறைக்க, பொதுமக்கள் அனைவரும், முககவசத்தை, வாய், மூக்கை மூடியப்படி முழுவதுமாக அணிய வேண்டும். அரசின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினார்.