ஈரோடு: தேர்தல் வாக்குறுதி எதையும் செயல்படுத்தாத தி.மு.க., அரசை கண்டித்து, ஈரோட்டில் கலெக்டர் அலுவலகம் முன், இந்து தேசிய கட்சி மாவட்ட தலைவர் குமாரசாமி தலைமையில் 'அல்வா' கொடுக்கும் நூதன போராட்டத்தை நடத்தினர். இதுகுறித்து அவர் கூறியதாவது: தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியில் அனைத்து விவசாயிகளுக்கும் நகைக்கடன் ரத்து, கல்வி கடன் ரத்து, மகளிர் குழு கடன் ரத்து, காஸ் சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம், முதியோர் உதவித்தொகை, 1,500 ரூபாயாக உயர்வு, மாதம் ஒரு முறை மின் கட்டண கணக்கீடு, குடும்ப தலைவிக்கு உரிமைத்தொகை மாதம், 1,000 ரூபாய், பொங்கல் பரிசுத்தொகை மாதம், 2,500 ரூபாய் அல்லது, 5,000 ரூபாய் வழங்கப்படும் என பல அறிவிப்பு செய்தனர். ஆட்சிக்கு வந்து ஏழு மாதங்கள் முடிந்த நிலையிலும், இதில் எதையும் நிறைவேற்றாமல் முதல்வர் ஸ்டாலின், மக்களை ஏமாற்றி அல்வா கொடுத்து வருகிறார். இதை பிரதிபலிக்கும் வகையில் மக்களுக்கு அல்வா கொடுத்து, அவர்கள் தெரிவித்த வாக்குறுதிகளை மீண்டும் நினைவூட்டுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.