ராமநாதபுரம் : மாவட்டத்திலுள்ள 131 கூட்டுறவு கடன் சங்கங்களில் கடந்த2020-21ம் ஆண்டைக் காட்டிலும், 3 மடங்கு அதிகமாக 2021--22ல் ரூ.150 கோடி வரை பயிர்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை ரூ.101 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. 2ம்போக சாகுபடியில் பருத்தி, மிளகாய் பயிரிடும் விவசாயிகள் பயிர்கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை அதிகரிப்பால் 2021 --22ல் 2 லட்சம் ஏக்கருக்குமேல் சம்பா நெல்சாகுபடி செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக பயிர்கடன் வழங்க கூட்டுறவுத்துறை இலக்கு நிர்ணயம் செய்தது. வேளாண் பணிகளுக்காக தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் பயிர்கடன் பெற விண்ணப்பித்தனர். மூவிதழ் அடங்கல் வழங்க தாமதம் காரணமாக கூட்டுறவு கடன்சங்கங்களில் விவசாயிகள் பயிர்கடன் பெறுவதில் தாமதம்ஏற்பட்டது.
தகுதியுள்ள நபர்களுக்கு விரைவில் பயிர்கடன் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். மாவட்டத்திலுள்ள மொத்தம் 131 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன்சங்கங்கள் மூலம் ஜனவரி வரை ரூ.101.65 கோடி வரை பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் கூட்டுறவுத்துறை மண்டல இணைபதிவாளர் ராஜேந்திர பிரசாத் கூறுகையில், 'வழக்கமாக ஆண்டுதோறும் ரூ.50 கோடி வரை பயிர்கடன் வழங்குகிறோம். 2021-22 ல் ரூ.150 கோடி வரை பயிர்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்தோம்.
சரியான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கப்படுகிறது. 2ம்போக சாகுபடிக்காக பருத்தி, மிளகாய் பயிரிடும்விவசாயிகள் பயிர்கடன் பெற விண்ணப்பிக்கலாம். 6 மாதம் வரை வட்டியில்லாமல் விவசாயிகள் பயிர்கடனை திரும்ப செலுத்தி பயன் பெறலாம்,' என்றார்.