காஞ்சிபுரம் மாவட்டத்தில், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த, பிரபல ரவுடி படப்பை குணா, நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி, அவர் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே சேத்துப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர், குணா என்கின்ற குணசேகரன், 43.இவர், மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டல், வழிப்பறி, மணல் கடத்தல், அடிதடி என 48 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இரண்டு முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளார்.ஆதிக்கம்குணாவின் மனைவி எல்லம்மாள், ஸ்ரீபெரும்புதுார் அருகே மதுரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர். இதனால், மதுரமங்கலம் கிராமத்தில், குணா குடும்பத்துடன் வசித்து வந்தார். ஆரம்பத்தில், கொலை, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து ஆகியவற்றின் வாயிலாக வருமானம் ஈட்டி வந்தார். கடந்த ஆட்சியில், ஸ்ரீபெரும்புதுார் சுற்றியுள்ள ஐந்து சிப்காட் தொழிற்பூங்காவில் கழிவு பொருட்கள் எடுப்பது, டிரான்ஸ்போர்ட், கேன்ட்டின், ரியல் எஸ்டேட் என அனைத்திலும், குணாவின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. தி.மு.க., ஆட்சியிலும் குணாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. ரவுடியில் இருந்து தொழில் அதிபராக வலம் வந்த குணாவுக்கு அரசியல் ஆசை எழுந்தது. தன் மீது வழக்குகள் உள்ளதால், மனைவி எல்லம்மாளை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வைத்து, ஒன்றிய கவுன்சிலராக்கினர். அதன் பின், அ.தி.மு.க., கவுன்சிலர் ஆதரவுடன், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றிய தலைவர் பதவிக்கு குறிவைத்தார். ஆளுங் கட்சியான தி.மு.க., வேட்பாளருடன் போட்டியிட்டு, சமமாக ஓட்டு பெற்றார் எல்லம்மாள்.பின், குலுக்கல் சீட்டு முறையில், தி.மு.க.,வேட்பாளரே வெற்றி பெற்றார். சம வாக்கு பெற்று, தமிழகத்தில் ஆளுங் கட்சியாக உள்ள தி.மு.க.,வுக்கே சவலாக குணா விளங்கினார். இதற்கிடையே, குணாவின் மனைவி எல்லம்மாள், பா.ஜ.,வில் இணைந்தார். இந்நிலையில், சுங்குவார்சத்திரம் அருகே கீரநல்லுார் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் நிலத்தை எழுதி தர சொல்லி, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட குணா, சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின் ஜாமினில் வெளியே வந்த அவர், தலைமறைவானார். அதிரடியாக மீட்புமதுரமங்கலம் கிராமத்தில் உள்ள, 5 ஏக்கர் நீர்நிலை புறம்போக்கு இடத்தை, குணா ஆக்கிரமித்து வைத்திருந்தார். இந்த இடத்தை, இருதினங்களுக்குமுன், மாவட்ட வருவாய்த் துறை, அதிரடியாக மீட்டது. ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் ரவுடிகளை ஒடுக்க, என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு காவல் படையினர், தலைமறைவான குணாவையும் வலை வீசி தேடி வந்தனர். குணாவின் ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, குணாவின் மனைவி எல்லம்மாள், 'என் கணவர் சரண் அடைய தயாராக உள்ளார்.போலீசார் அவரை என்கவுன்டர் செய்ய திட்டமிட்டுள்ளனர்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதை நீதிமன்றத்தில் போலீசார் மறுத்தனர். குணா, சரண் அடையும் பட்சத்தில், காவல் துறை விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவார் என, வழக்கு முடித்து வைக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று, சைதாப்பேட்டை 17 வது நீதிமன்றத்தில், ரவுடி குணா சரண் அடைந்தார். வரும் 31ம் தேதி வரை, குணாவை நீதிமன்ற காவலில் அடைக்க, நீதிபதி கிருஷ்ணன் உத்தரவிட்டார். பின், பலத்த பாதுகாப்புடன் பூந்தமல்லி கிளை சிறையில் குணா அடைக்கப்பட்டார். குணாவை, போலீஸ் காவலில் விசாரிக்க, ஓரிரு நாளில், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக போலீசார் கூறினர். - நமது நிருபர் -