சென்னை : ஒப்பந்த நிறுவனங்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்திக் கொள்ள, இரு கூட்ட அரங்குகளை வாடகைக்கு விட, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.சென்னை, அண்ணா சாலையில் 10 மாடி கட்டடம் உடைய மின் வாரிய தலைமை அலுவலகத்தில் 'பைக்கரா, ஹோவார்டு' ஆகிய கூட்டரங்குகள் உள்ளன. இதில், மின் வாரிய அதிகாரிகளின் ஆய்வு, ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கும்.மேலும், மத்திய அரசின் நிதி நிறுவனங்கள், வங்கியாளர்கள் மற்றும் மின் வாரிய ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுடனும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படும்.தற்போது மின் வளாகத்தில், வாரிய தலைமை அலுவலகத்திற்கு அருகில், மின் தொடரமைப்பு கழக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அங்கு உயரதிகாரிகளின் அறைகள் மாற்றப்பட்ட நிலையில், அங்குள்ள கூட்டரங்குகளில் மின் வாரிய கூட்டங்கள் நடக்கின்றன.இதையடுத்து, ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள் என, மின் வாரியம் தொடர்பான பணிகளை மேற்கொள்வோர் ஆலோசனைக் கூட்டம் நடத்திக் கொள்ள பைக்காரா, ஹோவார்டு அரங்குகளை, வாடகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு அரை நாள் கட்டணமாக 40 ஆயிரத்து 200 ரூபாய் மற்றும் அதற்கு 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி வசூலிக்கப்பட உள்ளது.