திருப்பூர்:அமெரிக்க வர்த்தகரிடமிருந்து, 15 லட்சம் ரூபாயை பெற்றுத்தரக்கோரி அவிநாசியிலுள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனம், ஆர்பிட்ரேசனில் புகார் அளித்துள்ளது.திருப்பூர் ஆர்பிட்ரேசன் கவுன்சில் நிர்வாக குழு கூட்டம், 'சைமா' அரங்கில் நேற்று கூடியது. கவுன்சில் தலைவர் கருணாநிதி தலைமைவகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
அதில், அவிநாசியை சேர்ந்த ஒரு ஏற்றுமதி நிறுவனம், 2021ல், 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடைகளை, அமெரிக்க வர்த்தகருக்கு அனுப்பியுள்ளது. அதற்கான தொகையை வர்த்தகர் வழங்கும் முன், சரக்கு கையாளும் நிறுவனம், அமெரிக்க வர்த்தகருக்கு ஆடைகளை வழங்கியுள்ளது.ஆடைகளை பெற்று கொண்ட வர்த்தகர், தொகையை வழங்காமல் இழுத்தடித்து வருகிறார். சரக்கு கையாளும் நிறுவனம், 17 லட்சம் ரூபாயை, ஆடை ஏற்றுமதி நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.
மீதம் 15 லட்சம் ரூபாயை பெற்று தரக்கேட்டு, நேற்று நடந்த ஆர்பிட்ரேசனில், ஏற்றுமதி நிறுவன உரிமையாளர்கள் புகார் அளித்தனர்.ஆர்பிட்ரேசன் கவுன்சில் தலைவர் கருணாநிதி கூறுகையில், ''அவிநாசியை சேர்ந்த ஏற்றுமதி நிறுவனம் அளித்த புகார் அடிப்படையில், அமெரிக்க வர்த்தகர் மற்றும் சரக்கு கையாளும் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளோம்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், சிறந்த வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்து, ஆடை தயாரிப்பில் ஈடுபட வேண்டும். அதேபோல், சரக்குகளை கையாளும் நிறுவனங்களின் நம்பகத் தன்மை குறித்தும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்'' என்றனர்.