தொல்லியல் அறிஞர்நாகசாமி௧௯௩௦ -௨௦௨௨புனே பல்கலையில், ‛தென்னிந்தியாவில் பெண் தெய்வ வழிபாடு‛ என்ற தலைப்பில், நாகசாமி ஒரு கட்டுரை வாசித்தார். அதன் ஆழமும், அதில் உள்ள கருத்துகளும், அவற்றை விளக்கிய விதமும், வட மாநில வரலாற்று ஆய்வாளர்களை மிகவும் கவர்ந்தது. அப்போது தான், எனக்கும் அவர் அறிமுகமானார். அன்று முதல் என் நண்பராகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.
அவரின் கருதுகோள்கள் மிகவும் ஆழமாக இருக்கும். 'தமிழின் சங்க இலக்கியங்களை, உ.வே.சாமிநாத அய்யர் பதிப்பித்து விட்டார். அதற்கான தொல்லியல் சான்றுகளை தருவது தான் நம் கடமை' என, என்னிடம் அடிக்கடி கூறினார். அதன் தாக்கத்தால் தான், ஆதிச்சநல்லுாரில் அகழாய்வை மேற்கொண்டேன். ‛தினமலர்' நாளிதழின் முன்னாள் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி, பெருவழுதி நாணயம் பற்றி கட்டுரை எழுதி, காலக்கணிப்பு செய்த போது, அதை நாகசாமி எளிதில் ஏற்கவில்லை. பின், நாணயவியல் கழகத்தில், இரா.கிருஷ்ணமூர்த்தி அளித்த விளக்கங்கள் மற்றும் பிற நாணயங்கள் குறித்த தரவுகளை தெரிவித்த பின், அவரை மிகவும் மதித்தார். நாணயங்களை நாங்கள் கண்டெடுத்தால் கூட, ‛தினமலர்' கிருஷ்ணமூர்த்தியிடம் காட்டி கருத்து கேளுங்கள் என்பார். தமிழகத்தில் உள்ள மிகப்பெரும் புலவர்களும், தமிழாசிரியர்களும் கல்வெட்டு படிக்க, நாகசாமியிடம் பயிற்சி பெற்றனர். லண்டன் நீதிமன்றத்தில், நடராஜர் சிலை பற்றிய வழக்கில், அதை பத்துார் நடராஜர் தான் என்பதை, நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். மண்ணுக்கடியில் கண்டெடுக்கப்பட்ட, பத்துார் கோவிலுக்கு சொந்தமான மற்ற சிலைகளில் ஒட்டியிருந்த மண்ணை எடுத்துச் சென்று, நடராஜர் சிலை மண்ணுடன் ஒப்பிட்டுக் காட்டினார். அவரின் புலமையை அறிந்து, நீதிபதிகள் வியந்து பாராட்டினர். அவரின் இழப்பு பேரிழப்பு.தி.சத்தியமூர்த்திமத்திய தொல்லியல் துறையின் முன்னாள் அதிகாரி.-------------***தொல்லியல் துறையின் இயக்குனராக, நாகசாமி இருந்த போது, கும்பகோணம் கல்லுாரியில் நான் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது, கோடை கால கல்வெட்டு படிக்கும் பயிற்சி நடத்துவதாக அறிந்து, அதில் பயிற்சி பெற்றேன். அவர் தான் வகுப்பெடுத்தார். அப்போது, தமிழகத்திலேயே, 10க்கும் குறைவானோர் தான் கல்வெட்டுகளை படிக்கத் தெரிந்திருப்பர். மாணவர்களுக்கும், தமிழ், வரலாற்று ஆசிரியர்களுக்கும், களத்துக்கே அழைத்துச் சென்று சொல்லித் தருவதை, நாகசாமி, ஒரு இயக்கமாக செய்தார். தற்போது, பள்ளி மாணவர்கள் கூட, கல்வெட்டுகளை படிக்கின்றனர். அதற்கான விதை, அவர் போட்டது தான்.நம் நாட்டில் தொல்லியல், மொழியியல், சிற்பம், ஓவியம், சங்கீதம், ஆகமம், மனையியல் என, தனித்தனி துறையில் சிறந்தவர்கள் உள்ளனர். ஆனால், நாட்டில் அனைத்திலும் சிறந்தவர்கள் இருவர் தான். ஒருவர், தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குனராக இருந்த களம்பூர் சிவராமமூர்த்தி; இன்னொருவர், தமிழக தொல்லியல் துறையின் இயக்குனராக இருந்த நாகசாமி. நாகசாமிக்கு, தமிழக கலைகள் மட்டுமல்ல, மேலை நாடுகளின் கலைகளும் தெரியும். தமிழக கலைகளை ஒப்பீட்டளவில் உயர்த்தி எழுதியதால் தான், மேலைநாடுகளில் நம் கலைகளின் மீது அதிக மரியாதை கிடைத்தள்ளது. நாட்டில் தீராத வழக்கான அயோத்தி வழக்கில், பாபர் மசூதிக்கு கீழ், ராமர் கோவில் இருந்ததற்கான சான்றுகளை, தொல்லியல் ஆய்வின் வாயிலாக நீதிமன்றத்தில் நிரூபித்தவர்களில், நாகசாமி மிகமுக்கியமானவர். என் தமிழ் கண்ணுக்கு டி.என்.ராமச்சந்திரனும், கலைக் கண்ணுக்கு நாகசாமியும் தான் ஒளியைப் பாய்ச்சியவர்கள். அவர்கள் இல்லாதது, தமிழகத்தின் இழப்பு.குடவாயில் பாலசுப்பிரமணியன்தஞ்சை சரஸ்வதி மகால் நுாலகத்தின் முன்னாள் காப்பாட்சியர்-----------------------------------------***தமிழ், வரலாறு படித்தவர்களும் தொல்லியல் துறைக்குள் நுழையலாம்; பணி செய்யலாம் என்பதை நிரூபித்தவர், நாகசாமி. எங்களைப் போன்ற தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு வாய்ப்பை வழங்கியவர். தனக்கு தெரிந்ததை, தன் மாணவர்களுக்கு ஒளிவு மறைவின்றி கடத்தியவர். காலம் பார்க்காமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியவர். ''ஆதாரமில்லாமல் கருத்து சொல்லக் கூடாது. அது தான் தொல்லியல் ஆய்வாளருக்கான இலக்கணம்,'' என கற்பித்தவர். தொல்லியல் துறை பற்றியே தெரியாத எங்களை பணியில் சேர்த்து, பணி ஓய்வு பெற்ற பின்பும் நாங்கள் பணி செய்ய காரணமானவர். எங்களின் ஆசிரியர் நாகசாமி.- மார்க்சிய காந்திமுன்னாள் தொல்லியல் கண்காணிப்பாளர், தமிழக தொல்லியல் துறை-------------------------------***தமிழக தொல்லியல் துறையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை தலைமை பொறுப்பில் அமர்த்தி, சாதிக்க முடியாத பணிகளை, இயக்குனர் என்ற பொறுப்பில் இருந்து சாதித்துக் காட்டிய தனி மனிதர், நாகசாமி. மத்திய தொல்பொருள் சட்டம் வந்த பின், தமிழக கோவில்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செப்புத் திருமேனிகளுக்கு காப்புரிமை வாங்கியவர். சிலைகள் கடத்தப்படும் போதெல்லாம், அவர் வாங்கிய தொல்பொருள் சான்று தான், அவற்றை மீட்கும் கருவியாக இருந்துள்ளது. சிலைகள் குறித்த அவரின் ஞானம் மிகப்பெரியது. அவருக்குப் பின், தமிழக தொல்லியல் துறை மங்கிய போது உயர்நீதிமன்றத்திடமும், தமிழக அரசிடமும் வாதிட்டு, மத்திய தொல்லியல் துறையில் இருந்து, நம்பிராஜன் தலைமையில், 30 பேரை வைத்து, 5000க்கும் மேற்பட்ட சிலைகளை நான் ஆவணப்படுத்தினேன். சிலை சார்ந்த வழக்குகளில் எல்லாம், அவரை அணுகி, அழைத்து, அவரின் நேரடி கருத்தைக் கேட்க தொல்லை தந்திருக்கிறேன். அவரை இழந்தது, நம் பாரம்பரிய சொத்தின் ஆவணத்தை இழந்தது போன்றது.பொன்.மாணிக்கவேல்தமிழக சிலைக்கடத்தல் தடுப்பு முன்னாள் ஐ.ஜி.,
--***நாகசாமியும் நானும், டி.என்.ராமச்சந்திரனிடம் கலையியல் படித்தோம். நாகசாமி எங்கள் குடும்ப நண்பர். அவர், ஒரு சிற்பத்தை கண்டதும், தன் அனுபவ அறிவால் காலத்தை கணித்துவிடுவார். கலைகளை ஒப்பிடுவதில், அவரைப் போல் வேறு யாரையும் நான் பார்த்ததில்லை.நாட்டில், தஞ்சை பெரிய கோவிலில் தான், மிகப்பெரிய கல்வெட்டு உள்ளது. தஞ்சை கோவிலின் நடனத்துக்காக, 400 நர்த்தகிககளை ராஜராஜன் பணியமர்த்தியது பற்றிய கல்வெட்டு, அது. அதில், நாட்டிய குரு, கலைஞர்கள், இசைக்கலைஞர்களுக்கான ஊதியம், அவர்களுக்கான முறை உள்ளிட்டவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அதை நாகசாமியிடம் எழுதி பெற்று, புத்தகமாக பதிப்பித்தேன். ராஜராஜனின் ஆயிரமாவது ஆண்டு விழாவில், ஆயிரம் பரதக்கலைஞர்களை வைத்து, தஞ்சை பெரிய கோவிலில் நாட்டிய நிகழ்ச்சி நடத்தினேன். அதில் பங்கேற்ற அனைவருக்கும், தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டு பற்றிய புத்தகத்தை இலவசமாக வழங்கினேன்.இசை, நாட்டிய, சிற்பம் உள்ளிட்ட அனைத்து சாஸ்திரங்களையும் அறிந்தவர், நாகசாமி. என் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பவராக இருந்தார். அவரின் நுால்களை எனக்கும், என் நுால்களை அவருக்கும் வழங்கி கருத்து கேட்பது வழக்கம். அவரின் 90வது பிறந்த நாளை, நாட்டியத்தின் வாயிலாக கொண்டாடி, வல்லுனர்களை அழைத்து, அவரைப் பற்றிய கருத்துகளை பகிர்ந்தோம். அவர் இல்லாதது ஆய்வுலகத்துக்கும், கலை உலகத்துக்கும் பேரிழப்பு.பத்மா சுப்பிரமணியம்பரதநாட்டிய கலைஞர்.