திருநெல்வேலி:சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக, மதுரை மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் மண்டல மேலாளர் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
திருநெல்வேலி, அன்பு நகரைச் சேர்ந்தவர் சுகுமார் கணபதி. 2020ல் துாத்துக்குடியில் மாவட்ட கலால் உதவி ஆணையராக பணியாற்றியபோது, டாஸ்மாக் ஊழியரிடம் 75 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் சிக்கினார். சுகுமார் கணபதி, தற்போது மதுரை மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் மண்டல மேலாளராக உள்ளார். இவர், 2015 - 2020 வரை வருமானத்துக்கு அதிகமாக, 50 லட்சம் ரூபாய் வரை சொத்து சேர்த்ததாக, துாத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
துாத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசார் இரு குழுக்களாகப் பிரிந்து, மதுரை சாத்தமங்கலத்தில் உள்ள சுகுமார் கணபதி வீட்டிலும், திருநெல்வேலி அன்பு நகரில் உள்ள வீட்டிலும் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.அவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கு ஆதாரமாக 40க்கும் மேற்பட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அவரது வங்கி லாக்கரிலும் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து, விசாரணை நடக்கிறது.