ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் கைதான இலங்கை தம்பதி, அடைக்கலம் கொடுத்தவர் ஆகிய மூவரும் பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அடிப்படை மதவாத அமைப்பினருடன் தொடர்பு இருந்ததாக, 'கியூ' பிரிவு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து, என்.ஐ.ஏ., விசாரிக்க, 'கியூ' பிரிவு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.
இலங்கை, நுாருல்யா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது யாசிர், 35. மலேஷியாவில் உணவு விடுதியில் பணியாற்றிய போது, ராமநாதபுரம் மாவட்டம், அப்துல் ரசீத்துடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2015ல் முகமது யாசிர், மனைவி ரசிகா 29, மருத்துவ சிகிச்சைக்காக, இலங்கையில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் வந்து, அப்துல் ரசீத் வீட்டில் தங்கினர்.இதய நோயாளியான ரசிகாவின் மருத்துவ சிகிச்சைக்காக வந்ததாக கூறப்பட்டாலும் அதற்கான ஆவணங்கள் இல்லை. இந்நிலையில், போலி ஆவணங்களை பயன்படுத்தி இந்திய ஆதார் அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் பெற்றுள்ளனர்.மேலும், தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், போலி ஆவணங்கள் பயன்படுத்தி ஆதார் அட்டை பெற்றதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, டிச., 29ல் முகமது யாசிர், ரசிகா, அப்துல் ரசீத் மூவரையும் கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு முகமது யாசிர், ரசிகா இருவரும் சென்னை புழல் சிறையிலும், அப்துல் ரசீத் முதுகுளத்துார் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
வாக்குமூலம்
இந்நிலையில், ராமநாதபுரம் கியூ பிரிவு போலீசார் முகமது யாசிர், அப்துல் ரசீது இருவரையும் ஜன., 20 முதல் ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.முகமது யாசிர், அப்துல் ரசீத் இருவரும் ஏராளமான சிம்கார்டுகளை பெற்று பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் அடிப்படை மதவாத அமைப்பினருடன் தொடர்பில் இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதற்காக மலேஷியா, சிங்கப்பூர் உட்பட 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று வந்துள்ளனர். முகமது யாசிர், சென்னையில் அடிப்படை மதவாத அமைப்பினரை சந்தித்துள்ளார். இலங்கையில் உள்ள அடிப்படை மதவாத அமைப்பின் பிரமுகருக்கு உச்சிப்புளியில், சிம் கார்டு வாங்கி கொடுத்துள்ளார். அதன் மூலம், பாகிஸ்தான் கராச்சியில் உள்ளவர்களுடன் பேசியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, இவர்களை தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என, கியூ பிரிவு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். நேற்று முன்தினம் போலீஸ் காவல் முடிந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.