சோமனுார்: கூலி உயர்வை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில், விசைத்தறியாளர்கள் ஈடுபட்டனர்.புதிய கூலி உயர்வை அமல்படுத்தக் கோரி, கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர், கடந்த, 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில் நடந்த இரு பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால், போராட்டத்தை தீவிரப்படுத்தி அரசின் கவனத்தை ஈர்க்க விசைத்தறியாளர்கள் முடிவு எடுத்தனர். இதையடுத்து நேற்று முன்தினம், ஆயிரக்கணக்கான விசைத்தறியாளர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், கூலி உயர்வை அமல்படுத்தாத ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கூலி உயர்வைப் பெற்றுத்தர, உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.அடுத்த கட்டமாக, கூலி உயர்வை வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி, முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தை நேற்று துவக்கியுள்ளனர்.சோமனுார் துணை அஞ்சலகத்தில், கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் பழனிசாமி தலைமையில், விசைத்தறியாளர்கள் திரண்டு, முதல்வருக்கு தபால்களை அனுப்பினர். இதேபோல், கண்ணம்பாளையம் அஞ்சலகத்தில், சங்கத்தலைவர் செல்வக்குமார் தலைமையில் தபால்களை அனுப்பினர்.