பொள்ளாச்சி;பொள்ளாச்சியில் நீர்நிலைகள் பாதுகாப்பதில் அலட்சியம் காட்டுவதால், மழைக்காலங்களில் வரும் நீர் சேமிக்க முடியாமல் வீணாகிறது. கோடை காலத்தில் வறட்சியை தடுக்க அதிகாரிகள், நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வெள்ள அபாயத்தை தடுக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையிலும் உள்ளூர் நீர் ஆதார கட்டமைப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.கால மாற்றத்தில், குளம், குட்டை, ஓடைகள் தற்போது குப்பை கழிவுகளை கொட்டுமிடமாக மாறியுள்ளன.அதில், பொள்ளாச்சி சி. கோபாலபுரம் பிரிவில் இருந்து ஆச்சிப்பட்டி செல்லும் ரோட்டில் செல்லும் ஓடையில், மழையின் காரணமாக தண்ணீர் வழிந்தோடுகிறது.ஆனால், தண்ணீரில் தற்போது, சமூக விரோதிகளால் கழிவுகள், மதுபாட்டில்கள் வீசப்பட்டு தண்ணீர் முழுவதும் மாசடைந்து வருகின்றன.சி. கோபாலபுரம் பிரிவில் உள்ள டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்கும், 'குடி'மகன்கள், திறந்த வெளி, 'பார்' ஆக ரோட்டை மாற்றி கும்பலாக அமர்ந்து குடிக்கின்றனர்.பின்னர் மதுபான பாட்டில்களை, அப்படியே அங்குள்ள ஓடையில் வீசிச் செல்கின்றனர். அவை தற்போது தண்ணீரில் மிதந்து கிடக்கின்றன. நீர்நிலைகள் பாதுகாப்பதில் அலட்சியம் காட்டுவதால், மழைக்காலங்களில் நீர் சேமிப்பு என்பது வெறும் கனவாக மாறியுள்ளது.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:குளம், குட்டையை பாதுகாக்கத்தவறியதால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோடை காலத்தில் வறட்சி அதிகரித்து நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்றது. தண்ணீரை விலை கொடுத்து வாங்கி, தென்னை மரங்களை காப்பாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது.சாகுபடி செய்ய முடியாமல் நிலங்கள் தரிசு நிலங்களாக மாறிகிடந்தது. இனியாவது குளம், குட்டை பாதுகாக்க ஏற்பாடுகள் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை தந்துள்ளது.மழை பெய்து குளம், குட்டைக்கு தண்ணீர் வந்தாலும் அவை தேங்குவதற்கான வசதியில்லை. ஒரு சில இடங்களில், தண்ணீர் தேங்கினாலும் அதனை பாழ்படுத்த ஒருசிலர் தீவிரம் காட்டி வருகின்றனர்.மழைப்பொழிவு உள்ள காலங்களில், அதனை சேமிக்க ஒரு திட்டமிடல் வேண்டும். இல்லையெனில், மீண்டும் வறட்சியில் சிக்கி தவிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.குளம், குட்டையை புனரமைக்க, உரிய முயற்சிகள் எடுக்க வேண்டும். அரசும், இளைஞர்களும் கை கோர்த்து நீர் நிலைகளை பாதுகாக்க முன்வர வேண்டும்.கண்காணிப்பு பணிகளை செய்து, மாசுபடுத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளையும், அதன் வழித்தடங்களையும் பாதுகாத்து வளம் பெற முயற்சி செய்வோம்.இவ்வாறு, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.