சூனாம்பேடு, : பருவமழையில் சிதிலமடைந்த வில்லிப்பாக்கம் சாலையை சீரமைக்கும் பணி, விறுவிறுப்பாக நடக்கிறது.செய்யூர் -- சூனாம்பேடு சாலை 18 கி.மீ., துாரமுடையது. 15 கிராம மக்களுக்கு பிரதான சாலையாக உள்ள நிலையில், கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையால், சாலையில் அரிப்பு ஏற்பட்டு சிதிலமடைந்தது.
வாகனங்கள் மற்றும் விவசாய பணிகளுக்காக டிராக்டர்கள் தொடர்ந்து சென்றதால், சாலையின் நிலைமை மேலும் மோசமானது. மின்விளக்கு வசதிகளும் இல்லாத காரணத்தால் இரவில், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கினர்.இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக செய்யூர் - சூனாம்பேடு சாலையில் சிதிலமடைந்த பகுதியை, நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைத்து வருகின்றனர்.