வாலாஜாபாத் : புதிதாக கட்டி முடிக்கப்பட்ட தரைப்பாலங்களின் மீது, வாகன போக்குவரத்து நேற்று முதல் துவக்கப்பட்டு உள்ளது.சதுரங்கப்பட்டினம் - திருத்தணி வரை, 105 கி.மீ., நீளமுடைய, இருவழிச் சாலை உள்ளது. வாகனங்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதால், நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணியில், நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டுள்ளது.முதற்கட்டமாக, சதுரங்கப்பட்டினம் - செங்கல்பட்டு வரை, சாலை விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
இப்பணி, 2015ல் துவங்கி, 2018ல் முடிந்தது. இரண்டாம் கட்டமாக, 2018ல், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருத்தணி வரை விரிவாக்கம் செய்ய, நிலம் அளவீடு செய்யப்பட்டு உள்ளது.குதிரைகால் மடுவு மற்றும் கம்பன் கால்வாய் பகுதிகளில், உயர் மட்ட தரை பாலம் மற்றும் கூரம்கேட், விஷ கண்டிகுப்பம், புதுப்பாக்கம் பகுதிகளில், சிறிய ரக தரைப்பாலங்கள் கட்டுமான பணி நடந்து வருகிறது.ஒரு பாதி தரைப்பாலமும், மற்றொரு பாதி சாலையில் வாகனங்கள் செல்வதற்கும் வழி விடப்பட்டிருந்தது.
இதில், புதுப்பாக்கம், விஷ கண்டிகுப்பம் உள்ளிட்ட சில பகுதிகளில், ஒரு பகுதி தரைப்பாலம் கட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது. இதில், வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. மற்றொரு பகுதியில், பாலம் கட்டுமானப்பணிகள் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.