விருத்தாசலம், : விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் ஆய்வு செய்த வேளாண் இயக்குனரிடம், விவசாயிகள் சரமாரியாக புகார் கூறியதால் பரபரப்பு நிலவியது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில், தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குனர் நடராஜன் ஆய்வு செய்தார்.
சேமிப்பு கிடங்குகள், பரிவர்த்தனை கூடங்கள், பழங்கள் குளிர்பதன கிடங்கு, உலர் களத்தை பார்வையிட்டு விளைபொருட்களை தரம் பிரித்து, மதிப்பிடும் கூடத்தை ஆய்வு செய்தார்.பின், கொள்முதல் செய்த சம்பா நெல் மூட்டைகளை பார்வையிட்டு, விவசாயிகளிடம் குறைகள் கேட்டறிந்தார். கோமங்கலம் விவசாயி வெங்கடாசலம் கூறுகையில்,'ஒரே வயலில் விளைந்த 100 நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தேன். அதில், 70 மூட்டைக்கு ரூ. 1,534; 30 மூட்டைக்கு ரூ. 1,250 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார்.விவசாயிகளின் நெல் மூட்டைகள் திறந்த வெளியில் கிடக்கின்றன. வியாபாரிகளின் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக பரிவர்த்தனை கூடங்களில் உள்ளன. உரிய நேரத்தில் பணம் பட்டுவாடா செய்வதில்லை. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விட குறைவாக விலை தருகின்றனர். நெல்லுக்கு விலை நிர்ணயம் செய்வதில் முறைகேடு நடக்கிறது. வெளியூர் வியாபாரிகளை அனுமதிப்பது இல்லை என சரமாரியாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.இதற்கு, இயக்குனர் பதிலளிக்கையில் ,கமிட்டியில் பரிவர்த்தனை, கொள்முதல் பணிகளை கண்காணிக்க இருவர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.பின்னர், அவர் கூறுகையில், 'கமிட்டியில் நெல் உள்ளிட்ட பொருட்கள் பரிவர்த்தனையை ஆய்வு செய்தேன்.
பணியாளர்கள் குறைவாக இருந்தால், மற்ற இடங்களில் இருந்து கூடுதலாக மாற்றி தரப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் கிடந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதாக வியாபாரிகள் கூறினர்.விளைபொருட்களை நேரடியாக விற்பதை விட, மதிப்புக்கூட்டி விற்றால் லாபம் அதிகமாக கிடைக்கும். இது தொடர்பாக, முதல்வர், வேளாண்துறை அமைச்சர் ஆலோசனையின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மின்னணு பரிவர்த்தனையை 100 சதவீதம் சரியாக செய்ய உத்தரவிட்டுள்ளேன். மாநிலம் முழுவதும் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்யும் போது, விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கும்' என்றார்.குறிஞ்சிப்பாடிகுறிஞ்சிப்பாடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில், ரூ 2 கோடி மதிப்பீட்டில் முந்திரி, காய்கறி மற்றும் பழங்கள் பதப்படுத்தும் மையம் அமைய உள்ள இடத்தை வேளாண் மற்றும் வணிகவரித்துறை இயக்குனர் நடராஜன் நேற்று ஆய்வு செய்தார்.